Published : 28 Mar 2017 02:29 PM
Last Updated : 28 Mar 2017 02:29 PM
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரிய மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது தொடர்பான விசாரணையை ஏப். 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் டி.ஆணழகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
தமிழகத்தில் 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 136 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் இறந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலராக சசிகலா தேர்வானதும், அவரும், அவரது குடும்பத்தினரும் பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்.
சசிகலாவை முதல்வராக்கும் நோக்கத்தில் 129 அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுதியில் இருந்து தப்பி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்பின் போது அரசியலமைப்பு சட்டப்படி ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்படி அரசின் ரகசியங்களை முதல்வரோ, அமைச்சர்களோ வெளியே யாருக்கும் தெரிவிக்கக்கூடாது.
இதனிடையே அதிமுக செய்தி தொடர்பாளர் கவுரிசங்கர், அதிமுக அரசு சசிகலாவின் ஆலோசனை, உத்தரவின் பேரில் நடைபெறுவதாக தெரிவித்தார். இதனை முதல்வரோ, அமைச்சர்களோ மறுக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தனர். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து சசிகலாவுடன். விவாதித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இது அவர்கள் பதவியேற்கும் போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாகும். இவர்கள் அரசின் ரகசியத்தை சசிகலாவுக்கு தெரிவிப்பவர்களாக உள்ளனர். எனவே முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக ஆளுனருக்கு மின்னஞ்சல் மற்றும் தபாலில் 13.3.2017, 16.3.207-ல் மனு அனுப்பினேன்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார். பின்னர் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். இதற்காக விசாரணை ஏப். 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT