Published : 27 Jun 2016 08:12 AM
Last Updated : 27 Jun 2016 08:12 AM
திருநின்றவூரில் நிலம் ஒதுக்கப்பட்டும் பஸ் நிலையம் அமைக்கப் படாததால், நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநின்றவூர், தலை நகர் சென்னையை ஒட்டியுள்ள பேரூராட்சியாகும். இங்கு பஸ் நிலையம் அமைக்க வருவாய்த் துறை அதிகாரிகள் நிலம் ஒதுக்கியும் பேரூராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் அமைக்காததால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கம் மற்றும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந் துள்ள திருநின்றவூரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, திருநின்றவூர் பகுதி களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இதனால், திருநின்றவூரில் இருந்தும், திருநின்றவூர் வழியாக வும் பாரிமுனை, பூந்தமல்லி, தி.நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் சென்று வருகின்றன.
ஆனால், திருநின்றவூரில் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தியதின் பேரில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த் துறை அதிகாரிகள் நிலம் ஒதுக்கினர். ஆனால், அதில் ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டன. மற்ற பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை தொடர்கிறது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் அமைக்காமல் உள்ளது.
அதே நேரத்தில், பஸ் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில், தற்போது சில மாநகர பஸ்கள் மட்டும் நின்று, பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றன. எனினும், சிறிது மழைக்கே அப்பகுதி சேறும் சகதியுமாக உருமாறி விடுகிறது. சம்பந்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை தனியார் வாகனங்கள் பார்கிங் பகுதியாக மாற்றிவிட்டன.
பஸ் நிலையம் இல்லாததால், சி.டி.எச்.சாலையிலேயே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. நிலம் ஒதுக்கப்பட்ட பிறகும் கூட பஸ் நிலையம் அமைக்கப் படாததால் பொதுமக்கள் நாள்தோறும் அவதியடைகின்றனர்.
பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT