Published : 13 Jan 2017 12:14 PM
Last Updated : 13 Jan 2017 12:14 PM

கௌசிகா நதியின் சிற்றோடைகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க திட்டம்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நிறைவேற்ற முடிவு



கோவை மாவட்டத்தில் கௌசிகா நதியின் சிற்றோடைகளில், புதிய வடிவிலான மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நிறைவேற்றவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக கீழ்பவானி, நொய்யல், அமராவதி, ஆழியாறு மற்றும் கௌசிகா நதி ஆகியவை விளங்குகின்றன. எனினும், வறட்சி காரணமாக ஆறுகள் மற்றும் அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் சராசரி மழையளவும் 690 மில்லிமீட்டர்தான். இதனால், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனத்தையே விவசாயிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனினும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, நீராதாரங்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேமிப்பை அதிகரிக்க வேண்டுமென்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோடையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே, கைவிடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அன்னூர், ஆனைமலை, காரமடை, கிணத்துக்கடவு, சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஒன்றியங்களில் 399 கைவிடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், தற்போது கௌசிகா நிதியின் சிற்றோடைகளில், புதிய வடிவிலான மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை அமைக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியது:

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ‘குருடி’ மலையில் உற்பத்தியாகும் கௌசிகா நிதி, 39 கிலோமீட்டர் கோவை மாவட்டத்திலும், 10.8 கிலோமீட்டர் திருப்பூர் மாவட்டத்திலும் பயணித்து, திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. பல்வேறு காரணங்களால் இந்த நதி வறண்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கௌசிகா நிதியைப் புனமரைக்க ரூ.87 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கௌசிகா நதியின் சிற்றோடைகளில், புதிய வடிவிலான மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நாகநதி புனரமைப்பு திட்டம்

பாலாறின் உபநதியான நாகநதியை இவ்வாறு புனரமைத்துள்ளனர். சுமார் ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினால், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 45 ஊராட்சிகள் பயனடைந்துள்ளன. அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் நிரம்பியிருப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு, நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. வறண்டு காணப்பட்ட பகுதிகள், பசுமையாய்க் காட்சியளிக்கின்றன.

எனவே, இதைப் பின்பற்றி கௌசிகா நதியின் சிற்றோடைகளிலும் இதுபோன்ற மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, சிற்றோடை பாதையில் 15 அடி நீளம், 6 அடி அகலத்தில், மண்ணின் தன்மைக்குத் ஏற்றபடி தேவையான ஆழத்தில் பெரிய குழிகள் தோண்டப்படும். சுமார் 20 அடி ஆழத்துக்குக்கூட குழியைத் தோண்டலாம். பின்னர் அதில் பெரிய குழாய் பதித்து, சுற்றிலும் ஒழுங்கற்ற கற்கள் கொட்டப்படும். ஓடையில் தண்ணீர் வரும்போது அந்தக் குழியில் தண்ணீர் தேங்குவதுடன், நிலத்தடியில் தண்ணீர் தேங்கும். இதனால், அதிக அளவில் வெள்ளம் வரும்போது, வீணாகாமல் தடுக்கப்படும்.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றியுள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் கௌசிகா நதியின் தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் பெறும் விவசாயிகள் பலனடைவர். கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க, இத்திட்டம் தீர்வாகவும் இருக்கும்.

இந்த திட்டத்தை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். அப்போது, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துகொடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் கௌசிகா நதி பாயும் சுமார் 40 கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்கட்டமாக பெரியநாயக்கன் பாளையம், காரமடை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வேளாண்மை செழிக்கும். விவசாயிகளின் தண்ணீர்த் தேவை பூர்த்தியடையும். குடிநீர்ப் பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x