Published : 25 Jul 2016 02:25 PM
Last Updated : 25 Jul 2016 02:25 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்கள் பல அழியும் தருவாயில் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. உடமைகளை இழந்து தவிக்கும் மீனவர்கள் பலர், தங்களின் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 43 மீனவ கிராமங்கள் உள்ளன. சுனாமிக்கு பின்னர் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சூறைக்காற்று, மழை பெய்யும் காலங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், மீனவர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரை மிதமான கடல் சீற்றம் காணப்பட்டாலும் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியும் என்பதால் பாதிப்பிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.
ஆனால், கடலோரப் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்கும் நிலையில் உள்ள வள்ளம், பைபர் படகு உட்பட சிறிய படகுகளை வைத்துள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அலைகள் வழக்கத்தைவிட உயரமாக எழுந்து வரும்போது சிறியரக படகுகள் கடலுக்குள்ளே கவிழ்வதும், மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
வசிப்பிடங்களுக்கும் ஆபத்து
கடலுக்குள் மீனவர்களின் வாழ்வு பெரும் போராட்டம் என்றால், கரையில் உள்ள அவர்களின் வசிப்பிடங்களும் எந்நேரமும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. மீனவ கிராமப் பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு போன்றவை அமைக்கப்படாததால் அவற்றை தாண்டி வரும் பேரலைகள் மீனவர்களின் வீட்டை பதம் பார்க்கின்றன. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் குடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல கடற்கரை கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முள்ளூர்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறும்போது, “தேங்காய்ப்பட்டணம், புத்தன்துறை, இனயம், சின்னத்துறை, முள்ளூர்துறை, இரையுமன்துறை, முட்டம், ராஜாக்கமங்கலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லை. மீனவ கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதில்லை.
தரமற்ற தடுப்புச் சுவர்
முள்ளூர்துறை, சின்னத்துறை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட கடலரிப்பு தடுப்பு சுவர் தரமற்றதாக இருந்ததால், சில மாதங்களிலேயே ராட்சத அலைகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சேதமடைந்துவிட்டன.
வீடுகளில் தண்ணீர் புகுந்து சேதமடைந்ததால், பல நாட்களாக உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளோம். வாழ்நாள் முழுவதும் கடலில் சென்று மீன்பிடித்து சேர்த்த பணத்தில் கட்டிய வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. அரசிடம் இருந்து இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. மீனவ கிராமங்களை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT