Published : 10 Jan 2014 10:40 AM
Last Updated : 10 Jan 2014 10:40 AM

பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர்

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் சிறப்பு போனஸ், கருணைத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாட்டின் இன்றியமையாத் தேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், குறைந்த விலையில் நிறைவான சேவையை அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டவை பொதுத் துறை நிறுவனங்கள்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் நன்கு செயல்பட வேண்டுமானால், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய பயன்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.

எனவே தான், தமிழக அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 1965 ஆம் ஆண்டு போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி போனஸ் வழங்கி வருகிறது.

போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் வராத பணியாளர்களுக்கு பொங்கல் தினத்தை ஒட்டி, சிறப்பு போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில்

உள்ள ஏ மற்றும் பி தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு 2 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத சி மற்றும் டி தொகுப்பு பணியாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.

சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாட வழிவகை ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x