Published : 04 Apr 2017 08:39 AM
Last Updated : 04 Apr 2017 08:39 AM
புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் விரைவாக நட வடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புழல் ஏரி நிரம்பினால் உபரி நீரை பாதுகாப்பாக வெளியேற்று வதற்காக கால்வாய் அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால்வாய் வடகரை, தண்டல்கழனி, காவாங்கரை, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், வைக்காடு வழியாக குசஸ்தலை ஆற்றில் கலந்து எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வந்தபோது இந்த கால்வாய் தண்ணீர் பெரிதும் பயன்பட்டு வந்தது. நெல், பாசிப்பயறு, முலாம்பழம் ஆகியவை இங்கு விளைவிக்கப்பட்டன. காலப்போக்கில் ஏராளமான குடியிருப்புகள் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இதில் கலக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்குன்றம், நார வாரிக்குப்பம் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ஏராளமான அரிசி ஆலைக் கழிவுநீர் இதில் பெருமளவு கலக் கிறது. அதேபோல வடகரை, தண்டல்கழனி, கிழக்கு காவாங் கரை, மேற்கு காவாங்கரை ஆகிய பகுதிகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீரும் இதில் கலக்கப்படுகிறது.
இந்த கழிவுநீர் தொடர்ந்து ஓடாமல் திருநீலகண்டர் நகரை ஒட்டிய பகுதியில் தேங்குவதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சுவையான குடிநீர் கிடைத்த இப்பகுதியில் இப்போது குடிக்க பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்பகுதியை பூர்விகமாகக் கொண்ட சிகாமணி கூறும்போது, “செங்குன்றம் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் செஃப்டிக் டேங்க் வசதி இல்லை. அனைத்து கழிவுநீரும் கால்வாயில் விடப்படுகிறது. அந்த ஒட்டுமொத்த தண்ணீரும் ஒரு காலத்தில் ஆடுதொட்டி அருகே தேங்கும். இப்போது அங்கு ஏராளமான குடியிருப்புகள் ஏற்பட்டதால், அந்த தண்ணீர் அப்படியே இந்த கால்வாயில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது” என்றார்.
இப்பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஜீவானந்தம் கூறும்போது, “புழல் பகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது சில மாதங்களில் நடைபாதையுடன் கூடிய தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மழைநீர் வடிகால்வாய் வசதியை கொண்டுவந்தால் 'வருவாய்' கிடைக்கும் என்பதால் இப்பகுதி அரசியல்வாதிகள் அதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தனர். இப்போது பெரும்பாலான வீடுகள், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அரசியல்வாதிகள் ஆசியுடன் மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது” என்றார்.
புழல் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பை விரைவாக ஏற்படுத்தி அனைத்து கழிவுநீரையும் அதன் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT