Published : 29 Mar 2014 10:30 AM
Last Updated : 29 Mar 2014 10:30 AM
குரோம்பேட்டையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் 80 சவரன் நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டது. கொரட்டூரில் ஒரு வீட்டில் 35 சவரன் நகைகள் திருடப்பட்டன.
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் சீனிவாச ராகவன் வசிக்கிறார். புதன்கிழமை இவர் குடும்பத்துடன் திருச்சி ரங்கம் கோயிலுக்கு சென்றுவிட்டார். அன்றைய தினம் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி பார்த்தசாரதியும் வேலைக்கு வரவில்லை. மறுநாள் காலையில் அவர் பணிக்கு வந்தபோது சீனிவாச ராகவன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் குரோம்பேட்டை காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டுக்குள் ஓர் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டிருந் தன. உடனே காவல் துறையினர் சீனிவாச ராகவனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, "முதல் அறையில் இருந்த பீரோவில் 80 சவரன் நகைகளும், ரூ.50 ஆயிரம் பணமும், சில வெள்ளி பொருட்களும் வைத்திருந்தேன். இரண்டாது அறையில் 20 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் பணமும் இருப்பதாக தெரிவித்தார். திருடர்கள் 80 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். வெள்ளிப் பொருட்களை எடுக்கவில்லை. இரண்டாவது அறைக்கு செல்லாததால் அங்கிருந்த நகை, பணம் தப்பியது.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல கொரட்டூர் கஸ்தூரி நகர் 2-வது தெருவை சேர்ந்த சண்முகம் திங்கள்கிழமை குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். புதன்கிழமை திரும்பி வந்தபோது, வீட்டின் பின்வாசல் உடைக்கப் பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு 35 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கொரட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT