Last Updated : 23 Apr, 2017 12:26 PM

 

Published : 23 Apr 2017 12:26 PM
Last Updated : 23 Apr 2017 12:26 PM

குற்றாலத்தில் கடும் வறட்சி: பசியில் தவிக்கும் குரங்குகளுக்கு கூட்டாஞ்சோறு; பெரிய மனதுடன் உதவும் சிறுவியாபாரிகள்

குற்றாலத்தில் வறட்சியால் திண்டாடும் குரங்குகளுக்கு, சிறுவியாபாரிகள் கூட்டாஞ்சோறு சமைத்து தினமும் வழங்கி வருகின்றனர்.

அருவிக்கு பெயர்பெற்ற குற்றாலத்தின் அடையாளங்களில் குரங்குகளுக்கும் முக்கிய பங்குண்டு. குற்றால குறவஞ்சி இலக்கியத்திலும் குரங்குகள் குறித்து பதிவுகள் உள்ளன. தங்களுக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு குற்றாலம் பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.

சீஸனில் சிரமமில்லை

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீஸன் காலத்திலும், அடுத்துவரும் செப்டம்பர் மாதத்திலும், சபரிமலை சீஸன் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் குற்றாலம் களைகட்டியிருக்கும். இரவும், பகலுமாக தற்காலிக மற்றும் நிரந்தர கடைகளில் வியாபாரம் நடைபெறும்.

இந்த குறிப்பிட்ட காலங்களில் அங்குள்ள குரங்குகளுக்கு தீவனம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. சுற்றுலா பயணிகள் அளிக்கும் உணவுப் பொருட்கள், கடைகளில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், உணவு விடுதிகளில் மிச்சமாகும் பண்டங்கள் குரங்குகளுக்கு கிடைக்கும். சிலவகை குரங்குகள் இலை தளைகளையும் உண்டு வாழ்கின்றன.

சீஸன் காலத்துக்கு பின் குரங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் போது, இலை தளைகள் கூட கிடைக்காமல் அவை திண்டாடுகின்றன.

குரங்குகளின் பரிதாப நிலையைப் பார்த்த, குற்றாலம் பிரதான அருவிப்பகுதி சிறு வியாபாரிகள், கோடையில் அவற்றுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகின்றனர். தங்களுக்குள் பணம் சேகரித்து அரிசி, காய்கறிகளை வாங்கி கூட்டாஞ்சோறு சமைத்து பிரதான அருவி பகுதியிலுள்ள குரங்குகளுக்கு தினமும் மாலையில் உணவு அளித்து வருகின்றனர்.

மனநிறைவைத் தருகிறது

இப்பணியில் ஈடுபட்டு வரும் டீ கடைக்காரர் ஆறுமுகம் கூறும்போது, ``கடந்த சில ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவளித்து வருகிறோம். தற்போது தினமும் 5 கிலோ அரிசி, ரூ.100-க்கு காய்கறிகள் வாங்கி சமைத்து கொடுத்து வருகிறோம். பொதுமக்களும் ரேஷன் அரிசி தந்து உதவுகின்றனர். பகல் முழுக்க பசியால் திண்டாடும் குரங்குகள் மாலையில் பரிமாறும் கூட்டாஞ்சோறில் ஒரு பருக்கையை கூட விடாமல் சாப்பிட்டுச் செல்வது எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது” என்றார் அவர்.

அரசுக்கு கோரிக்கை

குற்றாலம் நகர பாஜக துணைத் தலைவர் திருமுருகன் கூறும்போது, ``கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இச்சேவையை பாஜக முன்னெடுத்தது. இப்போது பிரதான அருவி பகுதியில் உள்ள குரங்குகளுக்கு சிறுவியாபாரிகள் உணவளிக்கின்றனர். குரங்குகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்த வேண்டும். பொதுமக்களும் உதவ வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x