Published : 23 Sep 2016 12:53 PM
Last Updated : 23 Sep 2016 12:53 PM
மதுரை மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான டிஜிட்டல் நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள் உள்ளன. எல்லா தரப்பினரும் இந்த நூலகங்களை பயன்படுத்த நவீன வாசிப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரம் உயர்த்தப்படுகிறது. தற்போது மாற்றுத் திறனாளிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் ஆடியோ வீடியோ அறையுடன் கூடிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படுகிறது.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் தினமும் புத்தகங்கள் வாசிக்க வருகின்றனர். அவர்கள் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் தற்போது இல்லை. சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமாக வந்தாலும், அவர்கள் மற்றவர்களின் உதவியுடன்தான் நூலகத்துக்குள் வரமுடிகிறது.
அதனால், கண் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் தடையின்றி புத்தகங்கள் படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான டிஜிட்டல் நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பிரத்யேக வசதிகள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மைய நூலக ஊழியர்கள் கூறுகையில், “கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை நிறுவனம், மாற்றத்திறனாளிகளுக்கான இந்த வாசிப்பு பிரிவை ஏற்படுத்த ரூ.7 லட்சம் மதுரை மைய நூலகத்துக்கு வழங்கியுள்ளது. இந்த நிதியில் 'பிரைலி' முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள், தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்கள், நவீன கருவிகள், கீ போர்டு, 'பிரிண்டர், ஆடியோ புத்தக வங்கி, புத்தக ஸ்கேனர், ஆடியோ - விஷுவல் அறை, மனவளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான பிரத்யேக கணினி வசதிகள், பேச்சுத்திறன் பாதிப்புள்ளவர்களுக்கு சாப்ட்வேர் பொருத்தப்பட்ட 'டேப்', 43 அங்குல டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. ஊனமுற்றவர்கள் நூலகத்தில் தடையின்றி நகர்ந்து சென்று புத்தகங்கள் படிக்க சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் தேர்ந்தெடுத்து படிக்க அவர்களுக்கான உயரத்தில் ரேக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. சாய்வு தளம் அமைக்கப்படுகிறது என்றனர்.
10 ரூபாயில் இன்டர்நெட் வசதி
நூலக ஊழியர்கள் மேலும் கூறுகையில், “இந்த நூலகத்தில் இன்டர்நெட் வசதியை மாற்றுத்திறனாளிகள், ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த அறையில் ஏசி வசதியும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வருகையை அதிகப்படுத்தி அவர்களுக்கான தனி வாசகர் வட்டத்தை உருவாக்க உள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT