Published : 09 Jan 2015 12:06 PM
Last Updated : 09 Jan 2015 12:06 PM

மதத் திணிப்பு, மொழித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மதவாத, மொழிவெறிப் போக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிய திமுக, முதலாவது தீர்மானமாக மொழித் திணிப்பு, மதவாத விவகாரங்களை கையில் எடுத்தது.

இது குறித்து திமுக பொதுக்குழு அறிக்கையின் ஒரு பகுதி வருமாறு:

நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிரதமர் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் தொடக்கத்தில் நாம் வரவேற்கத் தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. மேலும், வரவேற்க முடியாத ஒரு சில திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்த நேரத்தில், நாம் எடுத்துச் சொன்ன வாதங்களை ஏற்றுக் கொண்டு, அந்தத் திட்டங்களைத் தாங்களே முன் வந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

அவற்றையெல்லாம் பார்த்து மத்திய அரசைப் பாராட்டும் நிலையிலே நாம் இருந்த போதும், அதற்குப் பிறகு மத்திய அரசின் சார்பில் ஒரு சில அமைச்சர்கள் அறிவிக்கின்ற பிற்போக்குத் திட்டங்களைப் பார்க்கையில், எங்கே திசை மாறிச் செல்கிறார்களே என்ற வேதனைத் தீ தான் நம்மை வாட்டி வதைக்கச் செய்கிறது.

குறிப்பாக, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக, மதச்சார்பின்மை கொள்கையை, கை விட்டது மட்டுமின்றி, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்ட சூழலை ஏற்படுத்தி வருகின்றது.

அதைப்போல, இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் வழங்கி வந்துள்ள உறுதிமொழிக்கு மாறாக, பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் முரண்பட்ட போக்கைக் கடைப்பிடித்து வருவது இந்தி பேசாத, சமஸ்கிருதத்தை ஏற்காத மக்களுக்கு விளைவிக்கப்படும் அநீதியாகவே அமைந்துள்ளது.

”இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே”

”இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப்பிறந்தவர்கள்”

“பகவத் கீதை” - தேசிய நூல்;

“காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே”

“காந்திக்குப் பதிலாக, கோட்சே நேருவைத்தான் சுட்டிருக்க வேண்டும்”;

“நாடு முழுவதும் கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்”;

“கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி நாளாக அனுசரிப்பது”

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முயற்சி”;

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது”;

“தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தியை மட்டுமே பயன்படுத்துவது”;

“2021-ல் இந்தியாவை “இந்து ராஷ்ட்டிரமாக” மாற்றுவது” என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் - அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர்..

இத்தகைய வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம்தாழ்த்தி வன்மத்தைக் கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் - நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்பதால், மத்திய பா.ஜ.க. அரசை வரவேற்கின்ற நிலையிலே இருந்த நாம் தற்போது மத்திய அரசின் அணுகுமுறைகளைக் கண்டு வேதனைப்பட வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர்கள்பால் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுவதுடன் மத்திய அரசின் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய மதவாத, மொழிவெறிப் போக்கினை, மத்திய அரசு கைவிட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் அளித்த நாட்டின் “வளர்ச்சி” குறித்த வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மதச் சார்பின்மை கொள்கையிலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேட்கையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இயக்கங்களும் தங்களின் மாநில உணர்வு மற்றும் அரசியல் மனமாச்சரியங்களை மறந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.”

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x