Published : 22 Jan 2014 12:24 PM
Last Updated : 22 Jan 2014 12:24 PM
தமிழகத்தில் தேசிய மாணவர் படை மாணவர்கள் ராணுவத்தில் சேருவதற்கு உரிய பயிற்சிகளை அளிப்பதற்கு, தனியாக அகாடமி ஒன்றை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக்குநரகம் நாட்டிலுள்ள தேசிய மாணவர் படையில் மூன்றாவது பெரிய இயக்குநரகமாகும். 300 கல்லூரிகள் மற்றும் 600 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை உள்ளடக்கிய இயக்கமாகும்.
நமது தேசிய மாணவர் படையினர் புது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 11 முறை பரிசுகள் பெற்றுள்ளனர்.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சித் திட்டத்தின்படி, ஆளுமை மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான தகுதிகளுடன் கூடிய உயர் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியினை தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு அளிப்பதற்கென்று தனியாக பயிற்சி அகாடமி ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி கிராமத்தில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமியை அமைப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT