Published : 20 Aug 2016 08:46 AM
Last Updated : 20 Aug 2016 08:46 AM

1,500 கி.மீ. பிளாஸ்டிக் சாலை அமைத்த தமிழக சுற்றுச்சூழல் துறை: 1,400 டன் பிளாஸ்டிக் குப்பையாக மாற இருந்தது தவிர்ப்பு

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 1,596 கி.மீ. நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,460 டன் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாக மாற இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது.

நமது வாழ்வில் மிக அத்தியாவசிய பொருளாக பிளாஸ்டிக் மாறிவிட்டது. அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. பிளாஸ்டிக் விவகாரத்தில், அரசிடம் உரிய மேலாண்மை இல்லாததால், அவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தும், குப்பை மேடு களாகவும் காட்சி யளிக்கின்றன.

இந்நிலையில் குப்பைகளாக வெளியேறும் பிளாஸ்டிக் பொருட் களைக் கொண்டு மாநில சுற்றுச்சூழல் துறை சாலை அமைத்து வருகிறது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுற்றுச்சூழல் துறை கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,596 கி.மீ. நீளத்துக்கு ரூ.218 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகளாக மாற இருந்த 1460 டன் பிளாஸ்டிக், சாலையாக மாறியுள்ளது. பிளாஸ் டிக் பொருட்கள், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெறப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள், தார் சாலைகளை விட உறுதியாக உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.வாசுதேவன் வழங்கினார்’’ என்றார்.

பேராசிரியர் விளக்கம்

பிளாஸ்டிக் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது தொடர்பாக பேராசிரியர் ஆர்.வாசுதேவன் கூறியதாவது:

கடந்த 2001-ல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது தொடர் பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே வேளையில் ஏழைகளின் வீடுகளில் பார்த்தால், பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனதாக உள்ளன. பிளாஸ்டிக், ஏழைகளின் நண்பனாக திகழ்கிறது. எனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, பயன்படுத்த முயன்றேன். முதலில் பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, சாலை போட பயன்படுத்தும் தாருடன் கலந்தேன். அது வெற்றிபெறவில்லை. அதன் பிறகு, சாலை போட பயன்படும் ஜல்லி கற்களை சூடாக்கி, பொடியாக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் கொட்டி, கற்களின் மீது பிளாஸ்டிக் பூச்சு கொடுத்தேன். அந்த கற்களைக் கொண்டு, கடந்த 2002-ல் எங்கள் கல்லூரியில் சாலை அமைத்தேன். அதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரின் ஒப்புதல்படி, கோவில்பட்டி மற்றும் சென்னையில் ஜம்புலிங்கம் தெரு, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் சில பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட சாலையில், மழைநீர் புகுந்து செல்லாததால், இந்த சாலைகள் மழை காலத்தில் சேதமடையாததும், வழக்கமான தார் சாலையின் ஆயுட்காலத்தை (3 ஆண்டுகள்) விட, பிளாஸ்டிக் சாலைகள் 7 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும் 1 கி.மீ. சாலை அமைக்க 10 டன் தார் தேவைப்படும். பிளாஸ்டிக் சாலை அமைக்க 9 டன் தார் மட்டுமே தேவைப்பட்டது. இதன் மூலம் ஒரு டன் தார் செலவு மிச்சமாவதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை யும் பெற்றேன்.

பிரதமரிடம் விருது

இதன் பயன்பாட்டை உணர்ந்த தமிழக அரசு, எனது தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் 1400 டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு சாலை அமைத்துள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளாவது தவிர்க்கப்பட்டு, மறுசுழற்சி மூலம் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சாலை அமைத்ததற்காக பிரதமர் மோடியிடம் விருதும் பெற்றிருக்கிறேன்.

பிளாஸ்டிக் பொருட்களை வெளியில் வீச வேண்டாம். அதை சாலை அமைக்க கொடுங்கள் என்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர் களிடம் பிளாஸ்டிக் பொருட் களையும் சேகரித்து வருகிறேன்.

இவ்வாறு பேராசிரியர் ஆர்.வாசுதேவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x