Published : 08 Dec 2013 12:02 PM
Last Updated : 08 Dec 2013 12:02 PM
சாதிய படுகொலைகள் மற்றும் மோதல்களைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவை அமைக்க வேண்டும் என ’எவிடென்ஸ்’ அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் மீது கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு திரும்புகையில் குண்டு வீசியதில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பழிக்குப்பழி வாங்க ஒரு கும்பல் காத்திருந்தது.
கடந்த வியாழக்கிழமை 7 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முத்து விஜயன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, ஏழு பேர் கொலை சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிய தமிழக அரசு தற்போது முத்துவிஜயன் குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக ’தி இந்து’வுக்கு பேட்டியளித்த ’எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:
“ஐந்து லட்சமும் அரசு வேலையும் கொடுத்து பிரச்சினையை தற்காலிக மாகத்தான் முடிக்கப் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு இதுவல்ல. 2011-ம் ஆண்டு பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பழிக்குப் பழியாக ஆட்களை கொல்லும் சாதிய மோதல் கொலைகளும் தொடர் கதையாகிவிட்டது.
சாதிய மோதல்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை முறையாக எழுதப்படுவதில்லை. வழக்குகளை நடத்துவதில் போலீசார் அக்கறை எடுத்துக் கொள்ளாததால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது இது மாதிரியான சாதிய மோதல் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த சாதிய படுகொலை வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த வழக்குகளின் இப்போதைய நிலை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக எடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சாதிய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சாதிய அமைப்புகளைத் தடை செய்யவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.
அடுத்தபடியாக, மத மோதல்களைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் இருப்பதுபோல் சாதிய மோதல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் சிறப்புப் புலனாய்வு மற்றும் செயலாக்கப் பிரிவுகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அது நிர்வாகம், நீதி, போலீஸ் சார்ந்த முக்கூட்டு அமைப்பாக இருக்க வேண்டும்.
இந்த முக்கூட்டு அமைப்பை உருவாக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கொடியங்குளம் கலவரத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தத் தருணத்திலாவது அந்த அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT