Published : 18 Mar 2014 07:00 PM
Last Updated : 18 Mar 2014 07:00 PM
'விலைவாசி உயர்விற்கு காரணமாக இருந்துவிட்டு, இப்போது விலைவாசி பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் இன்று அதிமுக வேட்பாளர் வனரோஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:
"பத்தாண்டு காலம் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 9 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தும், தமிழ்நாட்டிற்காக எவ்வித நன்மையையும் செய்யாத கருணாநிதி அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
யாரை ஏமாற்றுவதற்காக இந்த அறிவிப்பு? தமிழக மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறாரா கருணாநிதி? விலைவாசி உயர்விற்கு காரணமான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும்; விலைவாசி உயர்விற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய தி.மு.க-விற்கும்; இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க படிப்பினையை புகட்ட வேண்டும்.
விலைவாசி உயர்விற்கு அடித்தளமாக விளங்குவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. பெட்ரோல் விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்றாற்போல் உயர்த்திக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அதிகாரம் வழங்கியது. அப்போது கருணாநிதி எங்கே இருந்தார். சந்திர மண்டலத்திலா இருந்தார்? அப்போது மத்திய அரசில் முக்கிய அங்கம் வகித்த கட்சி தி.மு.க. காங்கிரஸ் தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. மத்திய அரசின் இந்தத் தவறான கொள்கைக்கு ஏதாவது எதிர்ப்பைத் தெரிவித்தாரா? கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தாரா கருணாநிதி? இல்லையே!
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்த திமுக; அதற்கு ஒப்புதல் அளித்த கருணாநிதி, இப்போது விலை நிர்ணயக் கொள்கையை மாற்றி அமைத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். யாரை ஏமாற்ற இந்த வாக்குறுதி?
தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் ஒன்பது ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய தி.மு.க., சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு 98 தலைப்புகளில் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. பாடுபடும் என்றும்; அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 17 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. இவற்றை எல்லாம் ஏன் நிறைவேற்றவில்லை?
இதற்குக் காரணம் தன்னலத்தை பற்றி சிந்தித்து அதை நிறைவேற்றிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்தது தான். உங்கள் நலத்தை மறந்துவிட்டார். இப்போது மீண்டும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்காக உங்களுக்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். இவையெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காகத் தான்.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பொருளாதாரக் கொள்கை என்ற தலைப்பில் 'அரசின் கொள்கை முடிவுகளில் அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள தி.மு. கழகம் வலியுறுத்தும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியென்றால் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பிற தலையீடுகளின் பேரில் கொள்கை முடிவுகளை எடுத்து வந்ததா? அரசு சாராத நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்தியதா?
எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள் மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டன? அவற்றின் தலையீட்டினால் என்ன கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒன்பது ஆண்டு காலம் அங்கம் வகித்த தி.மு.க. நாட்டு
மக்களுக்கு விளக்க வேண்டும். இது பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள வாக்காளர்களுக்கு முழு உரிமை உண்டு. இதனை விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தி.மு.க-வுக்கும், அதன் தலைவர் கருணாநிதிக்கும் உள்ளது. இது குறித்த உண்மை நிலையை கருணாநிதி விளக்க வேண்டும் என்று கோருகிறேன். விளக்குவாரா கருணாநிதி? பொறுத்திருந்து பார்ப்போம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மிகப் பெரிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்த தி.மு.க., மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் தலையிட்டன என்று கூறியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அது பற்றி கேள்வி கேட்க எதுவும் இருக்காது. அரசு சாராத நிறுவனங்களின் தலையீடு என்று சொல்லி இருப்பதால் தான் இந்த விளக்கத்தை நான் கேட்கிறேன்.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நுகர் பொருட்களின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம், விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது என்பதை தி.மு.க. தெளிவாக்கி உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசுகையில், அரிசி மற்றும் பிற மளிகை பொருள்களின் முந்தைய விலை மற்றும் தற்போதைய விலை குறித்து பட்டியலிட்டு; மிளகாய் வத்தல் விலை 100 ரூபாய் என்று திரு. ஸ்டாலின் தெரிவித்த போது; அந்தக் கூட்டத்தில் இருந்த தி.மு.க-வினர் 110 ரூபாய் என்று தெரிவித்ததாகவும்; உடனே திரு. ஸ்டாலின் 'அடடே! நான் வரும் போது 100 ரூபாயாக இருந்தது; அதுக்குள்ள கூட்டிவிட்டார்களா?' என்று கூறியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இது போன்ற விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்தது யார்? மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும்; அதற்கு ஒன்பது ஆண்டு காலம் பக்க வாத்தியம் வாசித்த தி.மு.க-வும் தானே? விலைவாசி உயர்விற்கு காரணமாக இருந்துவிட்டு; இப்போது விலைவாசி பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது?
விலைவாசி உயர்விற்கு மூல காரணமான மத்திய காங்கிரஸ் அரசையும்; அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய தி.மு.க-வையும்; வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக; நமது ஆட்சியாக; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT