Published : 21 Mar 2014 06:42 PM
Last Updated : 21 Mar 2014 06:42 PM

ஜப்பான் போல சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முறை: தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை

ஜப்பான் நாட்டைப்போல சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, மக்களுக்கு எளிமையான முறையில் போக்குவரத்து வசதியை செய்து தருவது தொடர்பாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் நெடுஞ்சாலை மேம்படுத்துதல் மற்றும் நுண் ணறிவு போக்குவரத்து முறை தொடர்பான கருத்தரங்கம் புதன் கிழமை நடந்தது. சாலையை பயன் படுத்தும் மக்களுக்கு எளிமையான தகவல்களைத் தருவது, நெரிசலை குறைக்கும் வகையில் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பான ‘நுண்ணறிவு போக்குவரத்து முறை’ குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது.

இந்த கருத்தரங்கத்தை ஜப்பான் தூதர் மசானோரி நகானோ தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்தியா-ஜப்பான் நாடுகளின் உறவு சிறப்பாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே ஜப்பான் நிறுவனங்கள் 3 முதல் 4 மடங்கு அளவுக்கு முதலீட்டை அதிகரித்துள்ளன. கடந்த 2008 அக்டோபரில் 832 நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்தியாவில் 2,542 நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டுமே 523 நிறுவனங்கள் உள்ளன.

வர்த்தக கேந்திரம்

தென்னிந்தியாவை இணைக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதனால், தமிழகத்தில் ஜப்பான் நிறுவனங்கள் விரும்பி முதலீடு செய்கின்றன. இதற்கான போதிய வசதியும் இங்கு அளிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளை விட தமிழகத்தில் துறைமுகங்கள் சிறப்பாக உள்ளன. இதனால், நாங்கள் வர்த்தகம் செய்ய எளிமையாக உள்ளது. போதிய அளவில் திறன்வாய்ந்த மனித வளமும் இங்கு கிடைக்கிறது. ஜப்பான் வெளிநாடுகளில் செய்யும் முதலீட்டில் 60 சதவீதத்தை இந்தியாவில்தான் செய்கிறது என்றார்.

இதைத் தொடர்ந்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத் தின் இயக்குநர் ஆர்.கே.சிங் இந்திய நகர்ப்புற மேம்பாட்டில் போக்குவரத்தில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக பேசினார்.

இக்கருத்தரங்கில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம் துறை முதன்மை செயலர் ராஜீவ்ரஞ்சன், போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் பிராஜ்கிஷோர் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எஸ்.எம்.எஸ். மூலம் பஸ் தகவல்

கருத்தரங்கில் கலந்து கொண்ட மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் பி.பி.ராஜேந்திரன் கூறும்போது, ‘‘சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து தேவை மேலும், அதிகரித்துள்ளது.

எனவே, பொது போக்குவரத்து திட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில், மோனோ ரயில், பிஆர்டிஎஸ் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பயன்பெறும் வகையில் பஸ் வசதி குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பெறும் திட்டம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட திட்டங்களும் கொண்டுவரப்படவுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x