Published : 19 Jan 2017 03:40 PM
Last Updated : 19 Jan 2017 03:40 PM
குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரபாகர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனு:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை தாமிரபரணி ஆறு பூர்த்தி செய்கிறது. தாமிரபரணியில் இருந்து நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 12.5 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கங்கைகொண்டானில் 1996-ல் 2 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இதில் 45 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 2004-இல் கோகோ கோலா நிறுவனத்துக்கு 31.54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இ்ந்நிறுவனம் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வருகிறது. ஆயிரம் லிட்டருக்கு ரூ.37.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதே போல பெப்சி நிறுவனமும் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது.
குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் தற்போது போதிய தண்ணீர் இல்லை. எனவே குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற கிளையில் நவ. 21ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு எப்படி வழங்க இயலும் என கேள்வி எழுப்பி, தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி பெப்சி நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
குளிர்பான நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, ‘தாமிரபரணி ஆற்றில் இருந்து பயன்படுத்தப்படாமல் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் தான் குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
தாமிரபரணியின் தண்ணீர் இருப்பு, பாசனம், குடிநீருக்கு தேவையான நீர் இருப்பு ஆகியவற்றை கணக்கிட்டு வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
அந்த அடிப்படையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. நீதிமன்றத்தின் தடையால் குளிர்பானம் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தடையை விலக்க வேண்டும் என்றார்.
பிரதான மனுவின் மனுதாரர் லஜபதிராய் வாதிடும்போது, தாமிரபரணியில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்க ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் மேலாண்மை பிரிவுக்கு தான் அந்த அதிகாரம் உண்டு. அந்த பிரிவிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றார்.
இதையடுத்து குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதற்கு தற்போது விதிக்கப்பட்ட தடையை விலக்குவதற்கு மறுத்து, விசாரணையை பிப். 1ம் தேதிக்கு ஒத்திவைத்து, அப்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் மற்றும் மேலாண்மை பிரிவு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT