Published : 14 Jan 2017 11:14 AM
Last Updated : 14 Jan 2017 11:14 AM
கோயம்பேடு சந்தை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்புச் சந்தையில், பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அதனால் அங்கு நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் சிறப்புச் சந்தை கடந்த திங்கள்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. பொங்கல் நெருங்கிவிட்ட நிலை யில், விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்க மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு குவிந்தனர். இதனால் கோயம்பேடு சந்தை நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சிறப்புச் சந்தையில் கரும்பு மொத்த விளையில் 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.150 முதல் ரூ.300 வரையும், சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.20-க்கும் விற்கப்படுகிறது. மஞ்சள் செடிகள் மொத்த விலையில் 10 செடிகள் கொண்ட கொத்து ரூ.40-க் கும், சில்லறை விலையில் 2 செடி கள் கொண்ட கொத்து ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.
சாமந்தி பூ 1 முழம் ரூ.20, கதம்ப பூ ரூ.30, கனகாம்பரம் ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு பூசணிக்காய் (சுமார் 8 கிலோ) ரூ.60, ஒரு தேங்காய் ரூ.15, மாவிலை, பூலாம் பூ கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
காய்கறிகளை பொருத்தவரை, மொச்சைக்காய் கிலோ ரூ.100, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அவரைக்காய் கிலோ ரூ.20, கருணைக் கிழங்கு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.120, ஆரஞ்சு ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கரும்பு ஒரு கட்டு ரூ.450-க்கும், ஒரு கரும்பு ரூ.50-க்கும் விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.150 முதல் கிடைக்கிறது. விலை வீழ்ச்சி குறித்து கரும்பு வியாபாரி ஆர்.குணசேகரிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், அங்கிருந்து கரும்பு வரத்து குறைந்தது. மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் இருந்தே அதிக அளவு கரும்பு கொண்டுவரப்பட்டன. அதனால் கடந்த ஆண்டு விலை அதிகரித்தது. இந்த ஆண்டு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 200 லாரிகளில் வந்த கரும்பு, இந்த ஆண்டு 400-க்கும் அதிகமான லாரிகளில் வந்துள்ளன. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு வருவாயும் குறைந்துள்ளது என்றார்.
பொங்கல் விழாவுக்கான பொருட்களின் விலை குறைந் திருப்பது தொடர்பாக, அங்கு பொருட்களை வாங்க வந்திருந்த ஆர்.சரவணன் - தீபா தம்பதியர் கூறும்போது, இந்த ஆண்டு கரும்பு, தேங்காய், பழங்கள் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு விலை அதிகமாக இருந்ததால், அனைத்து காய்கறி கள் கலந்த தொகுப்பு, பூஜை பொருட்கள் அடங்கிய தொகுப்பு என சிக்கனமாக வாங்கிச் சென்றோம். இந்த ஆண்டு, தனித்தனியாக கிலோ கணக்கில் வாங்கிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT