Published : 23 Feb 2017 12:40 PM
Last Updated : 23 Feb 2017 12:40 PM

வைகை அணையை தூர்வாருவது சாத்தியமா? - தள்ளிப்போகும் ரூ.244 கோடி கனவு திட்டம்

காமராஜர் ஆட்சிக்கு பின் பாசனத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் அடிப்படையான அணைகள், ஏரிகள், குளங்கள் புதிதாக உருவாக்கப்படவில்லை. வனப்பகுதி, ஆற்றுவழித்தடங்களில் மண் அரிப்பை தடுக்க சிறிய தடுப்பணைகள் மட்டுமே அமைக்கப்படுகின்றன. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் புதிய அணைகள் கட்டும் நிலையில் தமிழகத்தில் இருக்கிற அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்களை பாதுகாக்க அரசு அக்கறை காட்டவில்லை என விவசாயிகளும், பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் 135 சிறிய பெரிய அணைகள் இருக்கின்றன. தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் வைகை அணை முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை முறையாக தேக்கி தென் மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தவே வைகை அணை 1959-ல் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சிமலையை சார்ந்தே இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் இருக்கிறது. பொதுவாக சரிவு அதிகம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று நீர் பல்வேறு வகையான மண் வகைகளுக்குள் கடந்து வரும்போது காட்டாற்று மணலும், மண்ணும் அதிகபடியாக வைகை அணையில் படிந்துவிடுகிறது.

அதனால், இந்த அணையின் கொள்ளளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நீண்ட நாட்களுக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போவதாகவும் பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், வடகிழக்கு பருவமழையை அடுத்த வறண்ட வெப்பமாதங்களின்போது நீர் அளிக்கும் கொள்ளளவு குறைகிறது.

தொடர்ந்து தைப்பட்டத்தில் விளைவிக்கக்கூடிய பயிர்கள், வைகை அணையில் தண்ணீர் இல்லாமல் வறட்சிக்கு இலக்காகுவதும் தொடர்கதையாகி வருகிறது. அணையின் கொள்ளளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் நீர் திறப்பு அளவுக்கு ஏற்றார்போல், நீரின் வேகம் அதிகரித்து தேனி மாவட்டம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான 250 கி.மீ., தூரத்துக்கு தண்ணீர் வேகமாக செல்வதற்கு வாய்ப்புள்ளது.

கொள்ளளவு குறைந்து இருக்கும்போது நீரின் வேகம் தடைப்பட்டு, வைகை அணையின் கடைக்கோடி பயனாளி மாவட்டமான ராமநாதபுரம் செல்ல வாய்ப்பே இல்லாமல்போகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மற்றும் ராமநாதபரம் மாவட்டங்களில் இருக்கும் 1.65 லட்சம் கிணறுகளும், 30 முதல் 50 சிறிய பெரிய குளங்களும் வைகை அணையில் திறந்துவிடப்படும் வைகை ஆறு நீர் செறிவினை நம்பியே உள்ளது.

மதுரை மாநகராட்சி உருவான காலத்தில் இருந்தே மதுரைக்கான குடிநீர் வைகை அணையில் நிறைவேற்றப்பட்ட வைகை குடிநீர் திட்டத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. மாநகராட்சி ஒரு நாளைக்கு குடிநீருக்காக வைகை அணையில் இருந்து 60 கன அடி தண்ணீரை எடுக்கிறது. தற்போது வைகையில் 21 அடி மட்டுமே இருப்பதோடு அதில் 15 அடி வரை சேறும், சகதியும் இருப்பதால் 30 கன அடி நீரை மட்டுமே எடுக்க முடிகிறது. இன்னும் 8 நாளைக்கு மட்டுமே வைகை அணையில் மதுரை மாநகராட்சி குடிநீருக்காக எடுக்க வாய்ப்புள்ளது.

அதனால், மதுரையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பியே அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு வருகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக வைகை அணையில் படிந்திரும் மண்ணே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் தைப்பட்டத்தில் சாகுபடி செய்த 43 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளன. மற்ற நிலங்கள் வானம் பார்த்த பூமியாக காணப்படுகின்றன. வைகை அணையில் திரும்பிய பக்கமெல்லாம் மண் மேடாக இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீரை தேக்கமுடியாமலும், அதனால், வறட்சி காலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். கடந்த 3 ஆண்டிற்கு முன் வைகை அணை தூர்வாரும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

தற்போது வரை இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் தள்ளிப்போவதால் விவசாயிகள் பிப் 28-ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து அதன்பிறகு போராட்டங்கள் நடத்தப்போவாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

அணைகள் பொதுவாக தூர்வாரப்படுவதில்லை. தமிழகத்தில் முதல் முயற்சியாக வைகை அணை தூர்வாரும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக திட்டம் தயாரித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள ‘வாப்காஸ்’ நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது பகுதி-1, பகுதி-2, பகுதி-3 ஆகிய மூன்று கட்டங்களாக ரூ.244 கோடியில் அணையை தூர்வார திட்டம் தயார் செய்தது. இதில் முதல் பகுதிக்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையை தூர்வாருவதற்கான வாய்ப்புகள் குறித்து ‘வாப்காஸ்’ நிறுவனம் ஆய்வு செய்து

தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் இந்த அணை தூர்வாரும் பணி தொடங்கிவிடும். மொத்தம் 5 ஆண்டுகள் இந்த தூர்வாரும் பணிகள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தூர்வாரினாலும், மண்ணை கொட்ட இடமில்லை

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: வாப்காஸ்’ நிறுவன அறிக்கைப்படி, அணையில் 33 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு மண் படிந்துள்ளது. இந்த மண்ணை அகற்றினால் ஒரு டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீரை அணையில் தேக்க முடியும். இந்த மண் அணையின் ஒரே பகுதியில் படியாமல் பெரியாரில் இருந்து அணைக்குள் வரும் ஆற்றில் இரு புறமும் 600 மீட்டர் தூரத்துக்கும், அணையின் கரையோரப் பகுதியிலும் படிந்துள்ளது.

இந்த மண் களிமண்ணாகவும், தாதுமணலாகவும், வண்டல் மண்ணாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அணை கட்டிய நாள் முதல் தற்போது அணை 1998-99-ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டுமே வைகை அணையில் பெரும் வெள்ள அபாயம் ஏற்பட்டு வைகை ஆற்றுவழியாக கடலில் வீணாக தண்ணீர் கலக்கும் நிலை ஏற்பட்டது. மற்ற காலக்கட்டத்தில் 27 முறை அணை நிரம்பியநிலையிலும் அணையில் இருந்து தண்ணீர் கடலில் கலக்கவில்லை.

ஆனால், இந்த மண்ணை அப்புறப்படுத்துவதாலே அணையில் அதிக தண்ணீரை தேக்கலாம் என்பது தவறான கருத்து. அணையில் ஷட்டர் இருக்கும் ‘0’ நீர் மட்டம் வரை மண் படியவில்லை. ஆனால், 10 அடிவரை சேறும், சகதியும் இருக்கிறது. அணையில் உள்ள மொத்த தண்ணீரையும் திறந்துவிட்டாலே இந்த மண் சென்றுவிடும். அணையில் நிரம்பி இருக்கும் வண்டல் மண், அணைக்கு மீண்டும் மழை காலத்தில் தண்ணீர்வரும்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டுவிடும்.

அதனால் அணையில் இருக்கும் மற்ற மண்ணை அகற்றினாலும் அதற்கான நீர் ஆதாரம் மழை மூலம் கிடைக்க வேண்டும். அணையின் 55 ஆண்டு கால வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் வந்துள்ளது. அணையில் எடுக்கப்படும் மண்ணைக் கொட்டுவதற்கு 6 ஆயிரம் ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான நிலம் இல்லை. அதனால், தூர்வாரினாலும் அதிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கொட்டுவதற்கு இடமில்லை என்றார்.

வைகை அணையின் வரலாறு

தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த ஆறுகளில் வைகை ஆற்றுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அணை ரூ.3 கோடியே 30 லட்சம் திட்டமதிப்பீட்டில் 1954 ஜன.1-ம் தேதி கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்து 59-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். அணை கட்ட ஒதுக்கிய 3 கோடியே 30 லட்சம் ரூபாயில் 40 லட்சம் ரூபாய் மிச்சமானது. இந்த தொகையைக் கொண்டு அணையின் அடிவாரத்தில் அணையை பார்வையிட வரும் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், அணையின் இயற்கை சூழலை ரசிக்கவும் மீதமிருந்த ரூ.40 லட்சத்தில் பூங்கா கட்டப்பட்டது. அணையின் மொத்த நீர் மட்டம் 71 அடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x