Published : 17 Feb 2014 09:20 AM
Last Updated : 17 Feb 2014 09:20 AM

பாஜக - தேமுதிக கூட்டணி ஏற்படும்: இல.கணேசன் நம்பிக்கை

பா.ஜ.க - தே.மு.தி.க இடையே கூட்டணி ஏற்படும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தனது 69–வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். இதையொட்டி காலை 8 மணியளவில் அவரது வீட்டில் தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தி.நகரில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இல.கணேசன் வந்தார். அங்கும் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

அதன்பின், இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:

பொதுவாக எனது பிறந்த நாளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் இந்தநாளில் ஒரு உள்ளார்ந்த காரணம் உள்ளது. நான் மத்திய அரசுப் பணியை உதறித்தள்ளி விட்டு 1970–ம் ஆண்டு இதே நாளில் ஆர்.எஸ்.எஸ். முழு நேர தொண்டராக இணைந்தேன். நாகர்

கோவிலில் நகர பகுதி பொறுப்பாளராக பணியாற்ற சென்றேன். இது தான் எனது பொது வாழ்வில் தொடக்க நாள். அந்த கால கட்டத்தில் நாங்கள் தேடித் தேடி சென்றாலும் ஆதரவு கிடைக்காத நிலை இருந்தது. இன்று எல்லோரும் தேடி வந்து ஆதரவு தரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த பலனாக இதை கருதுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தே.மு.தி.க தரப்பில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு பிரச்சினைகளுக்காக அவர் அணுகி இருந்தாலும் பிரதமரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி மாதிரி. அவரால் தபால்களை டெலிவரி செய்யத்தான் முடியும். காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தாரா, பேசினாரா என்பதெல்லாம் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

நேற்று வரை எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். மோடி அலையை பயன்படுத்தி ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க-வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம். வருவார்கள் என்று நம்புகிறோம்.

பா.ம.க-வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிராளியை விட கூடுதல் பலம் வந்தால் நல்லதுதானே. நாங்கள் கூட்டணிக்கான கதவுகளை இது வரை மூடவில்லை. இப்போது அவசரப்பட அவசியமும் இல்லை. தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் தென்பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் பிரச்சாரத்துக்கு வரும் படி மோடியை அழைத்துள்ளோம். அவரும் சம்மதித்துள்ளார். எப்போது வருவார் என்பது தேர்தல் நேரத்தில் முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x