Published : 25 Feb 2017 10:03 AM
Last Updated : 25 Feb 2017 10:03 AM
கப்பல்கள் மோதிக்கொள்ளும் விபத்து போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் நடுக்கடலில் கொட்டும் கச்சா எண்ணெய்யை எளிதில் பிரித்தெடுக்க உதவும் நவீன மின் மிதவை இயந்திர மாதிரியை, மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் எம்.அப்துல்ரசாக் என்பவர் உருவாக்கி உள்ளார். இந்தக் கருவிக்கான காப்புரிமை கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடுக்கடலில் 2 கப்பல் மோதிக் கொண்டதால் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி சுற்றுச்சூழல் மாசடைந்தது. கடலில் கச்சா எண்ணெய் பரவியால் ஏராளமான மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் மடிந்தன. இதுபோன்ற சூழலில் எண்ணெய் கடலில் கலக்கும்போது, கப்பலில் இருந்தபடியே குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எண்ணெய் படலத்தை ‘ரிமோட்’ மூலம் பிரித்தெடுக்கும் மிதவை இயந்திரத்தை, மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் எம்.அப்துல் ரசாக்(48) உருவாக்கி உள்ளார்.
45 வகையான கண்டுபிடிப்பு
இந்த இயந்திரம் வட்ட வடிவில் 5 சிலிண்டர்களை கொண்டுள்ளது. சிலிண்டர் ஒவ்வொன்றிலும் பேட் டரியில் இயங்கும் அதிக குதிரை சக்தி கொண்ட மின்மோட்டார், 5 சிலிண்டர் வழியாக எண்ணெய் வெளியேற்றும் பிளாஸ்டிக் குழாய் இணைப்பு, மின்சாரம் செலுத்த ஒரு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. கடல் நீருக்கும், நீரின் மேல் பகுதியில் படரும் கச்சா எண்ணெய்க்கும் இடையில் மிதவைக் கருவியை தாங்கிப் பிடிக்க, காற்று நிரப்பிய ‘டியூப்’ அமைக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார்களை இயக்கும் போது, நீரின் மேல் பகுதியில் படிந்த எண்ணெய் மட்டும் மோட் டார்களால் கீழ் நோக்கி உறிஞ்சப் பட்டு, பிளாஸ்டிக் குழாயில் வெளியேறுகிறது. எண்ணெய்யில் உள்ள தண்ணீரை மறுசுழற்சி மூலம் பிரித்தெடுக்க மற்றொரு கருவி ஒன்றையும் அவர் கண்ட றிந்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அப்துல் ரசாக் ஏற்கெனவே ரயில் தண்ட வாள விரிசலைக் கண்டுபிடிக்கும் கருவி உட்பட 45 வகையான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
இதுபற்றி அப்துல்ரசாக் கூறியதாவது: எனது முழுநேர பணி எலெக்ட்ரீசியன். பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிக்க முயற்சிப்பேன். அண்மையில் சென்னையில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கச்சா எண்ணெய் கடலில் பரவிய சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.
கடலில் எண்ணெய் கொட்டினால் கரை ஒதுங்கும் முன்பே நடுக்கடலில் மிதவை இயந்திரத்தால் எண்ணெய்யைப் பிரித்தெடுப்பது பற்றி சிந்தித்து, அதற்கான மாதிரி வடிவத்தைக் கண்டறிந்தேன்.
பேட்டரியால் இயங்கும் இந்த இயந்திரம் மூலம் கடலில் கலக்கும் கச்சா எண்ணெய்யைப் பிரித்தெடுக்கும் பெரிய அளவிலான இயந்திரத்தை உருவாக்கலாம். கடலுக்குள் படகு, கப்பலில் சென்று எண்ணெய் போன்ற திரவத்தைப் பிரித்தெடுக்க முடியாது.
குடியரசுத் தலைவருக்கு கடிதம்
நடுக்கடலில் ஓரிரு நபர்கள் மட்டும் கப்பலில் இருந்தபடியே, சுமார் 5 கி.மீ. தூரத்தில் படர்ந் துள்ள எண்ணெய்ப் படலத்தை மிதவை இயந்திரத்தைக் கொண்டு அகற்றிவிடலாம். பிரித்தெடுக்கும் எண்ணெய்யை கப்பலில் இருந்து சேகரித்து அப்புறப்படுத்தலாம். இந்த இயந்திரத்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மேலும் மத்திய பாதுகாப்பு அமைச் சகம், குடியரசுத் தலைவருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளேன். இதை ஏற்கும் பட்சத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கத் தயாராக உள்ளேன்.
இருபுறமும் செயல்படும் மின்விசிறி, ராணுவ வீரர்களுக்கு உதவும் பனி கோட், பாத்திரம் துலக்கும் கருவி, தானியங்கி குடிநீர் குழாய் உட்பட 45 கண்டுபிடிப்புகள் இதுவரை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பை விரும்புவோருக்கு தயாரித்து கொடுக்கிறேன். தேசிய விருது உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT