Published : 20 Aug 2016 10:58 AM
Last Updated : 20 Aug 2016 10:58 AM
தமிழகத்தில் 200 அரசுப் பள்ளிகள் குழந்தைநேயப் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்காக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகளின் முகத்தில் காணும் மகிழ்ச்சியை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் நம்மால் காண முடிவதில்லை. பள்ளிகளைக் கற்றுக்கொடுக்கும் இடமாக பார்க்காமல், தங்கள் சுதந்திரத்தைப் பறிக்கும் இடமாக குழந்தைகள் உணர்வதே இதற்குக் காரணமாகும். பள்ளி மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர், ஆசிரியரைத் தாக்கிய மாணவர் என அவ்வப்போது செய்திகள் வருவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் குழந்தைகள் மத்தியில் வகுப்பறை சூழல் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் மற்றும் சமூகக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் குழந்தைகள் நேயப் பள்ளிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக மண்டல வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து யுனிசெப் சார்பில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து வரும், சமூகக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஷ்யாம் சுந்தர் கூறியது: விளை யாட்டு, ஓவியம், எழுத்து, பேச்சு, நடனம் என குழந்தைகள் ஒவ்வொரு வரிடமும் வெவ்வேறு தனிப் பட்ட திறமைகள் உள்ளன. ஆனால் இந்தத் திறமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து கல்வியை மட்டுமே மையப்படுத்தி நாம் அவர் களை வழிநடத்திச் செல்கிறோம். கல்வி நிலையங்கள் என்பவை குழந்தைகள் கொண்டாடும் பள்ளியாக இருக்க வேண்டும்.
மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து கற்றுத்தருவதை விட, அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வகுப்பறையை உருவாக்க வேண்டும். அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். அவர் களைப் பேச அனுமதிக்க வேண்டும். ‘கலைந்த வகுப்பறை’ தான் உயிரோட்டமான வகுப்பறையாக இருக்க முடியும்.
தற்போது ஆங்காங்கே உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுடன் நண்பர்களாக பழகி அவர்களின் உலகத்துக்குள் செல்ல ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
பள்ளிகள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு தோன்றாத செயல்பாடு, குழந்தைகளிடம் பாகுபாடு காட்டாத சூழல், கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக வகுப்பறையில் இருந்து மாணவர்களை வெளி யேற்றாமல் இருத்தல் போன்ற சூழல்களைக்கொண்ட பள்ளிகள் தான் குழந்தைகள் நேயப் பள்ளி களாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால், அரசுப் பள்ளிகள் மட்டும்தான் குழந்தைகள் நேயப் பள்ளியாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ள பள்ளிகள். எனவே, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு தமிழ்நாடு முழுவதும் 200 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அந்தப் பள்ளிகளைக் குழந்தைகள் நேயப் பள்ளிகளாக உருவாக்க ஆசிரியர், தலைமை ஆசிரியர் களுக்குப் பயிற்சி அளித்து வருகி றோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT