Published : 13 May 2017 10:01 AM
Last Updated : 13 May 2017 10:01 AM
தமிழகத்தில் தயாராகும் திருஷ்டி பொம்மைகளுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மவுசு கூடி வருவதாகத் தெரிவிக்கின்றனர் இதனை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள். வாகன ஓட்டிகள் விதவிதமான கலை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட திருஷ்டி பொம்மைகளை வாங்குவதால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
புதிய வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், வாகனங்களுக்கு திருஷ்டி கழிப்பது என்பது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதனால், திருஷ்டி கழிகிறதோ இல்லையோ, இதன் கலைநயம் மாறிக்கொண்டே இருக்கிறது. கலைநயம் மிக்க பல வண்ண திருஷ்டி பொம்மைகளை செய்வதில் முன்னணி வகிக்கின்றனர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் குடியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர். இங்கு உருவாக்கப்படும் பொம்மைகளை மொபட்களில் ஏற்றி ஊர், ஊராகச் சென்று விற்பனை செய்கின்றனர். இவற்றின் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை.
கோவை மதுக்கரையில் மொபட்டில் வைத்து விதவிதமான திருஷ்டி பொம்மைகளை விற்றுக்கொண்டு இருந்த குமார் மற்றும் அவரது நண்பர் கூறியதாவது: 25 ஆண்டுகளாக இதே தொழில்தான் செய்கிறேன். வேறு தொழில் தெரியாது. இதில், கடல் சங்கு பெருமாளுக்கு உரியது. வில்வம் சிவனுக்கு உரியது. மஞ்சள் மங்கலத்துக்கானது. கரும்புள்ளி செம்புள்ளி திருஷ்டிக்கானது. சங்கு, சூரியபகவான் உள்ள திருஷ்டி பொம்மைகள் விலை அதிகம்.
சங்குகளை ராமேசுவரத்தில் இருந்து வாங்கி வருகிறோம். ஆட்டின் தாடை முடி, குதிரை முடி, தலைமுடி எல்லாம் கலந்து முடிக்கயிறு திரிக்கிறோம். தலைமுடி பழநியில் வாங்குகிறோம். இப்படி ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு ஊரில் இருந்து வாங்கி வந்து திருஷ்டி பொம்மைகளை கலைநயத்துடன் தயார் செய்கிறோம். இந்த வேலையை வீட்டில் உள்ள பெண்கள் கவனித்துக்கொள்கிறார்கள். ஊர், ஊராகச் சென்று விற்கும் வேலையை ஆண்கள் பார்த்துக்கொள்கிறோம்.
சிலர் கர்நாடகாவை நோக்கியும், சிலர் ஆந்திராவை நோக்கியும் செல்வார்கள். நாங்கள் கேரளாவை நோக்கி பயணம் செய்கிறோம். பாலக்காடு, திருச்சூர் வரை போய் திரும்புகிறோம். ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ் நகர் என செல்கிறோம். ஊருக்கு திரும்பி வர ஒரு மாதம் வரை ஆகும். முன்பெல்லாம் திருஷ்டி பொம்மைகளை வீடுகளில் வாங்கிக் கட்டுவது அதிகமாக இருந்தது. இப்போது லாரி ஓட்டுநர்கள் வாங்கிக் கட்டுகிறார்கள். கோயில்களிலும் இதை கட்டுகிறார்கள்.
திருஷ்டி பொம்மையில் அர்த்தனாரீஸ்வரர் கோலம்பூண்ட பொம்மை அதிகமாக விற்பனையாகிறது. தினமும் செலவுபோக ரூ.500 முதல் ரூ.750 வரை கிடைக்கும். இதில் திருஷ்டி கழிகிறதோ இல்லையோ, இதன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் மக்கள். அதுவரை எங்கள் தொழிலும் நன்றாக நடக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT