Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கையோடு இயற்கையாக இணைந்து விட்டார். அவரைப் போன்றே இயற்கையை நேசித்து வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சிறப்பித்து வருகிறது தமிழ்க் காடு எனும் அமைப்பு.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கடந்த டிசம்பர் 30-ம் தேதி பட்டுக்கோட்டையில் உயிர் நீத்தார். அவரது நினை வேந்தல் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த ராமநத்தத்தில் இம்மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.
தமிழ்க் காடு தொடக்கம்
தமிழ்க் காடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதன் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கடலூர் மாவட்டத்தில் நம்மாழ் வாரைப் போன்று இயற்கையை நேசித்து, அதன்படி வாழ்ந்து வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ’நம்ம ஊரு நம்மாழ்வார்’ என அழைத்து நினைவேந்தல் நிகழ்ச்சியின் மூலம் சிறப்பித்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 125 இயற்கை வேளாண் விவசாயிகள் பங்கேற்றனர். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தோழர் பொழிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இயற்கை விவசாயி களுக்குப் பருத்தித் துணி அணிவித்து சிறப்பித்தனர்.
‘உழவன் தாத்தா’
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறியதாவது, ‘’நம்முடைய ‘உழவன் தாத்தா’ நம்மாழ்வார் விட்டுச் சென்றப் பணிகளை நாம் தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இயற்கை வாழ்வியல் அறிஞர் மண்ணுக்கு விதையாக மாறிவிட்டார். இவ்வேளையில் நம்மாழ்வார் போன்று ஒவ்வொரு பகுதியிலும் இயற்கை உழவு, மரம் நடுதல், சித்த மருத்துவம், யோகக்கலை எனப் பல்வேறு இயற்கை சார்ந்த சமூகப் பணிகளை செய்பவர்களுக்கு நம்மாழ்வார் நினைவாக 'நம்ம ஊரு நம்மாழ்வார்' எனப் பருத்தி துண்டு, துணிப்பை, நம்மாழ்வார் பற்றிய நூல் போன்றவற்றை வழங்கிச் சிறப்பிக்கப்படும். இது போன்று ஒவ்வொரு பகுதியிலும் கண்டறிந்து செயல்பட்டால் நம்மாழ்வார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT