Published : 17 Jan 2017 12:23 PM
Last Updated : 17 Jan 2017 12:23 PM
ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணியில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளும், பெரிய பொருளாதார பலமும் இருப்பதாக நேற்று அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கேற்க வந்த சவுதி அரேபியாவில் பணிபுரியும் மதுரை பொறியாளர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நேற்று நடந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாது தமிழகத்தின் பிற மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அமீர், இசையமைப் பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட் டவர்க ளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர் களை உற்சாகப்படுத்தி பேசினர்.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் உள்ளூர்வாசி கோவிந்தராஜ் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தடையின் பின்னணியில் வெளிநாடுகளின் வணிக நோக்கம் இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளைகளை குழந்தைகள் போல வளர்க்கிறோம். ஒரே ஒருநாள் 5 நிமிடம் மட்டும் ஜல்லிக்கட்டுக்காக விளையாட விடுகிறோம். அப்போதும் துன்புறுத்துவதில்லை. கொஞ்ச நேரம் விளையாட்டுதான் காட்டுவோம். நாட்டு பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமம். ஒரு வீட்டில் ஒரு பசு மாடு வளர்த்தால், குடும்பமே பிழைக்கும். ஆனால், இன்று ஜல்லிக்கட்டு தடையால், எதிர்காலத்தில் நாட்டு மாடுகள் இனம் அழிந்து பாலுக்கு மட்டுமில்லாமல் எல்லா உணவுப் பொருட்களுக்கும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்வர் என அரசுகளையும், அரசியல் கட்சிகளையும் நம்பி ஏமாந்து விட்டோம். இனி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்துவிட்டு எங்கள் ஊருக்குள் அரசியல் கட்சியினர் வரலாம். அதுவரை அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்கப் போறோம் என்றார்.
சவுதி அரேபியாவில் இருந்து வந்த மதுரை பொறியாளர் பி. கார்த்திக் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுக்கான தடை ஒரு நாட்டு மாட்டின் பிரச்சினை அல்ல. நமது நாட்டின் பிரச்சினை. பீட்டா என்பது, இந்தியாவில் செயல் படும் அமெரிக்காவின் பெரிய பணக்காரத் தொண்டு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பின்னணியில் அமெரிக்கா போன்ற நாடுகளும், பணபலமும் இருக்கிறது. இவர் கள் நடத்துகிற நிகழ்ச்சிகளில் நாட் டின் மிகப்பெரிய பதவிகளில், அதிகாரத்தில் இருப்பவர்கள் கலந்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட இந்த அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்? எப்படி ஒரு அமெரிக்க நிறுவனம், இந்திய நாட்டின் கலாச்சாரம், விளையாட்டில் தலையிடலாம்.
நம் நாட்டில் இருப்பவர்களுக்கே ஜல்லிக்கட்டு தொடர்பாக சரியான புரிதல் இல்லாததால்தான், அவர்களை எதிர்க்க முடியவில்லை. இனிமேல் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்துக்கு ஆதரவான போராட்டத்தோடு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளோம். அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை புறக்கணிக்கப் போகிறோம் என்றார்.
இயக்குநர் அமீர் கூறுகையில், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவது மட்டுமே தடைக்கான காரணம் இல்லை. அப்படியென்றால், ஸ்பெயின் நாட்டில் கொடூரமாக நடக்கும் காளைச் சண்டையை அவர் கள் தடை செய்யலாமே. விவசாயிகள் மிகவும் நேசிக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்ய, அழிக்க நினைப்பதன் நோக்கம் என்ன?. அடுத்த ஆண்டா வது ஜல்லிக்கட்டு நடத்தியாக வேண் டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதர வான போராட்டங்கள், மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி, தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறோம்
அலங்காநல்லூர் தமிழரசி கூறுகையில், நாட்டுல என்னென்னமோ தப்பு நடக்குது. உள்ளூர் கவுன்சிலரு முதல் பெரிய அரசியல்வாதிங்க வரை எவ்வளவோ ஊழல் செய்றாங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு, ஜல்லிக்கட்டுக் காளை வளர்த்தா தப்புங்கிறாங்க, அவிழ்த்து விட்டா தப்புங்கிறாங்க. பொங்கல் வந்துட்டாலே வீட்டுக்கு வீடு போலீஸ்காரங்க வந்து நிக்கிறாங்க. வீட்டுக் காவலில் எப்படி நாங்க பண்டிகை நாளில் நிம்மதியா, மகிழ்ச்சியா இருக்க முடியும். அது என்னவோ பீட்டாவாம், அவங்களுக்கு எங்க ஊரில் ஜல்லிக்கட்டு நடந்தா என்ன வந்துச்சு. அவங்க எதிர்க்க எதிர்க்க நாங்க நடத்தத்தான் செய்வோம். அவங்களால எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT