Published : 10 Feb 2017 01:02 PM
Last Updated : 10 Feb 2017 01:02 PM
ஆச்சர்யப்படுத்தும் நிகழ்வாக அதிமுக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பன்னீர் செல்வத்தின் பக்கம் இணைந்தது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், கட்சியில் இருப்பதாலேயே அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் மதுசூதனன் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று கை கூப்பி வேண்டியவர்கள் நீங்கள். ஆனால் இப்போது எந்த விஷயம் உங்களை அணி மாறத் தூண்டியது?
ஆம், சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டவன். அவர் கட்சியைத் திறமையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரின் ஒட்டுமொத்த குடும்பமும்தான் கட்சியை நடத்துகிறது. இதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஓபிஎஸ்ஸின் பத்திரிகையாளர் சந்திப்பின் பின்னரே, அவர் அவமானகரமான சில நிகழ்வுகளை எதிர்கொண்டார் என்பது தெரிந்தது. கட்சியின் பொருளாளருக்கே இதுபோன்ற நிலை ஏற்படும் என்றால், இது அவைத்தலைவருக்கும் ஏற்படாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது? நாங்கள் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இல்லை. கட்சியைக் காப்பாற்றவே இருக்கிறோம்.
சசிகலாவின் குடும்பம் கட்சியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்கள்...
ஆம். இப்போது அவர் குடும்பத்தின் ஒவ்வொரு தனி நபரும் கட்சி செயல்பாடுகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன் மட்டும்தான் இருந்தார். அவராவது ஆரம்பக் காலங்களில் கட்சிக்காக உழைத்திருக்கிறார். அம்மா (ஜெயலலிதா) அவர்கள் அனைவரையும் வெளியேற்றினார். இப்போது அவரின் மரணத்துக்குப் பிறகு, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் திரும்ப வந்துள்ளனர். அவர்கள் கட்சியில் இருக்கும் அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். அதை எதிர்த்தே அதிமுக தொடங்கப்பட்டது. அது இங்கேயும் நடந்துகொண்டிருக்கிறது.
ஓபிஎஸ்ஸின் பின்னால் திமுக இருப்பதாக சசிகலா கூறுகிறாரே. திரைக்கு பின்னால் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா?
ஓபிஎஸ் நிச்சயமாக திமுகவின் பின்னால் இல்லை. நாங்கள் இருவருமே எங்களின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அதிமுகவில்தான் இருந்திருக்கிறோம். திமுக தமிழகத்தை ஆள நினைக்கிறது. அவர்கள் எப்படி பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள்? திமுக என்மீது 49 வழக்குகளைச் சுமத்தி இருக்கிறது.
என் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை, நான் திமுகவை எதிர்த்துக்கொண்டுதான் இருப்பேன். திமுகவின் குடும்ப அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கும் நான் எப்படி, திமுகவுக்குச் செல்வேன்?
உங்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்ன?
எனக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் எதையுமே எதிர்பார்க்கவில்லை. 2016-ல் அம்மா என்னிடம் எம்எல்ஏ சீட் அல்லது எதாவது சீட் வேண்டுமா என்று கேட்டார். நான் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவருக்கும், கட்சிக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அவைத் தலைவர் பதவியே போதும். இப்போது கட்சியைக் காப்பாற்றவே விரும்புகிறோம்.
சசிகலா அணியினர் 131 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் பன்னீர் செல்வத்துக்கான வாய்ப்பு என்னவாக இருக்கும்? உங்களுக்கு வெறும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது...
அவர்கள் புதன்கிழமை அன்று அனைத்து எம்எல்ஏக்களையும் கைது செய்து, ஒவ்வொருவரையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும்போது அவர்கள் ஓபிஎஸ்ஸையே ஆதரிப்பார்கள். கடைசி நிமிடத்தில் இது நிச்சயமாக நடக்கும்.
சசிகலா, தான் முதலமைச்சராவது 100% உறுதி என்று கூறியுள்ளாரே?
அம்மா இறந்து முழுதாக மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், சசிகலா முதல்வராக ஆசைப்படுகிறார். அதற்குள் என்ன அவசரம்? ஓபிஎஸ் நன்றாக செயலாற்றிக் கொண்டிருக்கும்போது, எதற்காக அவரை மாற்ற வேண்டும்?
ஓபிஎஸ் என்ன மனநிலையில் இருக்கிறார்? நீங்கள் என்ன பேசினீர்கள்?
அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அவர்கள் (எதிரணி) யாருடனும் பேச்சு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினேன். கட்சிக்குத் திரும்புமாறு சசிகலா அழைப்பு விடுத்தாலும் சமாதானமாக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சமரசமாக மாட்டேன் என்றார். கட்சி என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே செய்வோம்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 'இரட்டை இலை' சின்னத்தைக் கேட்பீர்களா?
அத்தகைய சூழ்நிலை ஏற்படும்போது, சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வர வாய்ப்புள்ளதா?
பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழில்:ரமணி பிரபா தேவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT