Last Updated : 17 Jan, 2017 10:59 AM

 

Published : 17 Jan 2017 10:59 AM
Last Updated : 17 Jan 2017 10:59 AM

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் இப்போதும் குவியும் கூட்டம்

சென்னையில் தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் தினமும் மக்கள் கூட்டம் இன்னும் குறையாமல் குவிகின்றது. ஆரம்ப காலத்தில் சென்னை ராயப்பேட்டை 160, லாயிட்ஸ் சாலை யில் இருந்த வீட்டில் தனது அண்ணன் சக்ரபாணியுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

ஜானகியை திருமணம் செய்த பிறகு ராமாவரம் வீட்டில் குடியேறினார். அப்போது புறநகராக ராமாவரம் இருந்த தால் தியாகராய நகர் ஆற்காடு சாலையில் உள்ள இந்த வீட்டை 1970-ம் ஆண்டு வாங்கினார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., பின்னர் அதிமுகவைத் தொடங்கிய போது தி.நகர் வீடு கட்சி அலுவலக மானது. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரானதும், தி.நகர் வீடு அலுவலகமாகவும், அரசியல் பணிகளுக்கான இடமாகவும், அரசுப் பணிகளுக்கான இடமாகவும் மாறியது. 17 ஆண்டுகள் தி.நகர் வீட்டில்தான் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் இருந்தார் என்கிறார் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத் தின் மேலாளர் கே.சுவாமிநாதன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, தி.நகர் வீடு எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இந்த நினைவு இல்லத்தை 1990-ம் ஆண்டு மே 19-ம் தேதி ஜானகி அம்மாள் திறந்து வைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு இந்த இல்லத்தை டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவு அறக்கட்டளை பராமரித்து வருகிறது. அரசு செலவில் பராமரிக்கக் கூடாது என்றும் அறக்கட்டளை மூலமே நினைவு இல்லம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர். தனது உயிலில் கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது. காலணிக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. நினைவு இல்லத்துக்குள் நுழைந்ததும் வலதுபுறம் சிறிய கோயில்போல அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையைக் காணலாம். வீட்டின் பெரிய அறைக்குள் சென்றால் கண்ணாடி அலமாரியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைப் பார்க்கலாம். அவற்றுக்கிடையே எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாளின் முழு உருவ புகைப்படமும் பளிச்சிடுகிறது.

எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு முதல் முதலில் நடித்த சதிலீலாவதி படத்தில் இருந்து 1978-ம் ஆண்டு கடைசியாக நடித்து வெளியான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரையி லான திரைப்படக் காட்சிகள் புகைப்படங் களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘அடிமைப் பெண்’ இறுதிக் காட்சி யில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். சண்டை யிடுவார். அந்தச் சிங்கம் 1970-ம் ஆண்டு இறந்த பின், அதன் உடலை எம்.ஜி.ஆர். பதப்படுத்தி வைத்திருந்தார். அந்த சிங்கம் கண்ணாடிப் பேழைக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர எம்.ஜி.ஆர். பயன்படுத் திய கார், தொப்பி, கூலிங் கிளாஸ், வாட்ச், பேனா, ஆடைகள், ஷூ மற்றும் காலணிகள், உடற்பயிற்சிக்குப் பயன் பட்ட கர்லா கட்டைகள் ஆகியவற்றை யும் பார்க்கலாம். எம்.ஜி.ஆரின் தாய், தந்தை படங்களுடன், அரசியல் வாழ்க் கையில் அவர் பழகிய தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி, இந்திராகாந்தி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது. முதல்வராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்த பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்களின் படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக நினைவு இல்லத்தைச் சுற்றிப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிப்பது நெகிழ்வு.

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு வார நாட்களில் தினமும் 200 பேர் வரையிலும், விடுமுறை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் ஆயிரம் பேர் வரை வருகின்றனர். பராமரிப்புக்காக செவ்வாய்க்கிழமை விடுமுறை. இந்தாண்டு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு செவ்வாய்க்கிழமை (இன்று) வருவதால், பொதுமக்கள் பார்வைக்காக நினைவு இல்லம் திறந்திருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x