Published : 03 Jun 2016 02:33 PM
Last Updated : 03 Jun 2016 02:33 PM
வெளிநாட்டில் வேலைபார்க்கும் இளைஞர்கள், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் முகமாக ‘கல்வி’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கியிருக்கிறார் அமெரிக்கா- கலிபோர்னியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர் வினோத் முரளிதர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கோவை மாநகராட்சி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 30 ஏழை எளிய மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான விழா கோவையில் வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பை நிறுவிய வினோத் முரளிதர் கூறியதாவது: ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எங்கள் குழுவில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். எல்லோருமே வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள். நான் கோவை சாயிபாபா காலனியில் பிறந்து, இங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக உள்ளேன்.
தாய்நாட்டுக்கு வரும்போது வீட்டு வேலை செய்யும் பெண்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு இயன்ற உதவிகளை- குறிப்பாக நன்றாக படித்தும், மேலே படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு பண உதவிகள் செய்வது வழக்கம். சில அமைப்புகள், நண்பர்கள் மூலமே செய்து வந்தேன்.
இந்த பொருளுதவி முறையாக போய்ச் சேருகிறதா? என்பதை தெரிந்து கொள்ளும் எண்ணம் வந்தது. அதற்காகவே ‘கல்வி’ என்ற தமிழ் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி கல்லூரி படிப்புக்காக குழு நிதி உதவி முறையில் செய்ய ஆரம்பித்தேன். அது கடந்த வருடமே அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகவே கல்வி.காம் என்ற இணையதளம் தொடங்கி, அதில் உதவி கோரும் மாணவர்களை பற்றிய பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில், அந்த மாணவனின் சூழ்நிலை, படிப்புக்கு தேவையான உதவிகள் குறித்த விவரங்கள் இடம் பெறும். இதைப்படிக்கும் அன்பர்கள் அவர்களால் இயன்ற நிதி உதவியை இந்த மாணவர்களுக்கு அளிக்க முன்வருவார்கள். இவை, இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.
இத் திட்டத்தில், இந்தியாவுக்கு பணமாறுதல் செய்வது, உரிய நேரத்தில் குறிப்பிட்டவர்களுக்கு நிதி போய் சேராதது என பல குறைபாடுகள் தெரியவந்தன. எனவே, அதை அப்படியே இயங்கவிட்டு, இந்தியாவில் ஒன்றை தொடங்க திட்டமிட்டோம். அதற்கு இங்குள்ள எனது கல்லூரி கால நண்பர்கள் பலர் உதவினர். என் பெற்றோரை அறங்காவலர்களாக வைத்து ‘கல்வி’ என்ற அமைப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினோம்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் செயல்படும் இந்த அமைப்பு மூலமாக உதவிகள் செய்யப்படுகிறது. இந்த அமைப்பு மூலமாக உதவிகள் தேவைப்படும் மாணவர்களை கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு சென்று தேர்ந்தெடுத்தேன். முதலில் 84 பேரை தேர்ந்தெடுத்து, அதில் 30 பேரை இறுதிப்படுத்தி அவர்களுக்குத் தேவையான ‘ஸ்காலர்ஷிப்’ வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT