Published : 26 Jan 2014 09:40 AM
Last Updated : 26 Jan 2014 09:40 AM

ரூ.441 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் ரூ.441 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களையும் ரூ.412 கோடியில் 6 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்களையும் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆரணி, பெரியகுளம், திருவத்திபுரம், திண்டிவனம் ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் ரூ.117 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

ஜெர்மன் மேம்பாட்டு வங்கி கடன் உதவித் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்தவும், வருடத்துக்கு ரூ.11 கோடியே 10 லட்சம் செலவில் அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் முதல்வர் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கவும் முதல்வர் நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு பூண்டி கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரூ.93 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் திட்டம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் செயல்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் (நகராட்சிகள், மாநகராட்சிகள்) படிப்படியாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரியகுளம், சாத்தூர், மேட்டூர், அரக்கோணம், திருப்பத்தூர், சிதம்பரம் ஆகிய 6 நகராட்சிகளில் மொத்தம் ரூ. 412 கோடியே 50 லட்சம் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.441 கோடியே 46 லட்சம், பாதாளச் சாக்கடைத் திட்டங்களுக்காக ரூ.412 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.853 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x