Published : 05 Oct 2013 11:05 AM
Last Updated : 05 Oct 2013 11:05 AM

இடிந்தகரையில் 5,000 நாட்டு வெடிகுண்டு!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை, அதன் அருகிலுள்ள கூத்தன்குழி மீனவர் கிராமங்களைச் சுற்றிலும், குறைந்தபட்சம் 5,000 நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில், இடிந்தகரையில் 781 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அணுஉலை முற்றுகை, கடல்வழி முற்றுகை, மனித சங்கிலி, மண்ணில் புதைந்து போராட்டம் என்றெல்லாம் போராட்டம் பல்வேறு பரிமாணங்களைக் கண்டிருந்தது.

அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடத்துவோருக்கும், போலீஸாருக்கும் மோதல் சம்பவங்களும் நடைபெற்றன. இடிந்தகரைக்குள் நுழைந்தால் பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் இருந்ததால் போலீஸார் அதை தவிர்த்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் வீசக்கூடும் என்றும் போலீஸார் கருதினர். இதுபோல், கூத்தன்குழி கிராமத்துக்குள்ளும் போலீஸார் நுழைய முடியவில்லை. அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே, பல ஆண்டுகளாக இந்த மீனவர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மீனவர்கள் மோதுவது வாடிக்கையாகி இருந்தது. இதுதொடர்பாக பல வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் இந்த கிராமங்களுக்குள் போலீஸார் நுழையவில்லை அல்லது நுழைய முடியவில்லை.

இடிந்தகரையில் போராட்டம் நடைபெற்றுவந்த அதே நேரத்தில் சமீப காலமாக கூத்தன்குழி கிராமத்திலும் இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி, கடந்த சில நாளட்களுக்கு முன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி கூத்தங்குழியிலிருந்து வெளியேறியவர்களை மீள் குடியமர்த்தும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்டன.

அதன் தொடர்ச்சியாக கூத்தன்குழி மீனவர் கிராமத்துக்குள் 2 ஆண்டுகளுக்குப் பின் போலீஸார் கடந்த புதன்கிழமை உள்ளே சென்று, முகாமிட்டுள்ளனர். அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மணலுக்குள் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், அவற்றை கைப்பற்றும் நடவடிக்கைகளில் போலீஸார் உடனே இறங்கவில்லை. காரணம், சமாதான கூட்டத்தின்போது அத்தகைய வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீஸாரிடம் ஒப்படைப்பதாக கிராம பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தனர்.

இதனிடையே, இடிந்தகரை கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து, புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரு கிராமங்களிலும் எந்தெந்த இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை போலீஸார் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். மேலும், அங்குள்ள நாட்டு வெடிகுண்டுகள் எந்த வகையை சேர்ந்தது? அதன் திறன் குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இடிந்தகரை, கூத்தன்குழி பகுதிகளில் மட்டும் குறைந்தபட்சம், 5 ஆயிரம் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர். இந்த குண்டுகளை எவ்வாறு கைப்பற்றி அழிப்பது என உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரியிடம் கேட்டபோது, கூத்தன்குழியிலிருந்து வெளியேறியுள்ள குடும்பங்களை அங்கு மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கையில், காவல்துறை ஈடுபட்டுள்ளது. கூத்தன்குழி கிராமத்துக்குள் பேருந்துகள் சென்று வருகின்றன. அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது என தெரிந்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணப்பன் இருந்தபோது, கூத்தன்குழி கிராமத்தில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டிருந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் இங்கு சோதனை நடத்தி நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி வந்தனர். 1998-ம் ஆண்டுக்குப்பின் இந்த வெடிகுண்டு கலாசாரம் ஓய்ந்திருந்தது. இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த பின்னணியிலேயே போராட்டக் குழுவினர் இடிந்தகரையிலிருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x