Published : 02 May 2017 10:59 AM
Last Updated : 02 May 2017 10:59 AM
முதுமை என்பது முடங்குவதற் கல்ல. இதை சிலர் மட்டுமே புரிந்து கொண்டு, வாழ்க்கையில் பயனுள்ள காரியங்களை செய்துகொண்டு கடைசிகாலத்தை நிம்மதியாக கழிக்கின்றனர்.
மதுரை அருகே 72 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சுமார் 50 ஏக்கரில் மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்துவரும் விவசாயி ஜெயராமன், 3 ஆண்டுகள் கடும் வறட்சி ஏற்பட்டபோதும் ஒரு மரம்கூட பட்டுப் போகாமல் காப்பாற்றி சாதனை செய்துள்ளார்.
மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (72). முன்னாள் நூல் வியாபாரியான இவர், மதுரை வரிச்சியூர் அருகே 50 ஏக்கரில் மா உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. 3 ஆண்டுகளாக கடும் வறட்சி தொடரும் நிலையிலும் ஒரு மரம் கூட பட்டுப் போகவில்லை. மாறாக, கடந்த ஒரு மாதத்துக்குள் புதிதாக 400 கன்றுகளை நட்டுள்ளார். காலை முதல் மாலை வரை பம்பரமாக தோட்டத்தில் சுழல்கிறார். வெயிலோ, மழையோ எதுவும் இவரை சோர்வடையச் செய்வதில்லை. தன்னை சுறுசுறுப்பாக வைத்துள்ளது இந்த விவசாயம்தான் என்கிறார் ஜெயராமன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எனது சொந்த ஊர் தே.கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி. பெரிய விவசாயக் குடும்பத்தில்தான் பிறந்தேன். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே மதுரைக்கு வந்து விட்டோம். ஆரம்பத்தில் மதுரை கோட்ஸ் நூற்பாலையில் நூல்களை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தேன்.
தொழில் நல்லபடியாக நடந்ததால் வீடு, நிலம் வாங்க முடிந்தது. எனது மகன் திருப்பூரில் ஏற்றுமதியாளராக உள்ளார். மகள் திருச்சியில் பள்ளி ஒன்றின் முதல்வராக உள்ளார். இதற்கும் மேல் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
எனது மனநிறைவுக்கு ஏற்ற தொழிலைச் செய்ய விரும்பினேன். நூல் வியாபாரத்தை அப்படியே நிறுத்தினேன். பலரும் என்னைப் பார்த்து பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கேட்டனர். நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். 23 ஆண்டுகளுக்கு முன் வரிச்சியூர் அருகே 50 ஏக்கர் நிலம் வாங்கி இருந்தேன். அந்த நிலத்தை கஷ்டப்பட்டு பணப்பயிர் விவசாயத்துக்கு ஏற்ப தயார் செய்தேன். இதற்கே 5 ஆண்டுகளும், கணிசமாக செலவும் ஆனது.
நிலத்தில் மா, கொய்யா, தென்னை, சப்போட்டா, நாவல் என பல மரங்களை வைத்துள்ளேன். ஆடு, மாட்டுச்சாணம் உள்ளிட்ட அனைத்துமே இயற்கை உரம்தான். மரத்தை சரியான முறையில் பராமரித்து, தேவையான அளவு உரம், தண்ணீர் விட்டு பாதுகாக்கிறேன். இதனால் விளைச்சல் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சியிலும், ஒரு மரம்கூட பட்டுப் போகாமல் இருக்கக் காரணம் இயற்கை உரம்தான். செயற்கை உரத்தை பயன்படுத்தி இருந்தால் 70 சதவீத மரங்களை இழந்திருப்பேன்.
ஒரு மரத்துக்கு உரம் ரூ. 100, பராமரிப்புச் செலவு ரூ. 200 ஆகிறது. ஒரு பருவத்தில் ஒரு மரம் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு விளைபொருளை தருகிறது. தினசரி 3 டன் வரை அறுவடையாவதால் நல்ல லாபம் கிடைக்கிறது. சரியான பருவத்தில் காய்களை பறித்தால் தானாகவே பழுத்துவிடும். கார்பைடு கற்களுக்கு வேலையே இல்லை. சந்தையில் ரூ. 70-க்கும் விற்கப்படும் மாம்பழங்களை, வியாபாரிகள் எங்களிடம் ரூ.15-க்கு வாங்குகின்றனர். இதில் கமிஷன் செலவும், இறக்குக் கூலியும் கழியும்.
நெல் கொள்முதல் நிலையங் களை போல், மா உள்ளிட்ட அந்தந்த சீசனில் விளையும் பொருட்களை விற்க அரசு விற்பனை நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயத்தை முறையாக, கவனத்துடன், இயற்கை சார்ந்து செய்தால் எந்தச் சூழலிலும் நஷ்டம் ஏற்படாது. தண்ணீர் வசதியும், இலவச மின்சாரமும் இல்லாவிட்டால், விவசாயத்தை கனவில்கூட நினைக்க முடியாது. விவசாயத்தை உயிருள்ளவரை கைவிட மாட்டேன்’ என்றார்.
பூச்சி பிடிப்பான் கருவி
ஜெயராமன் தனது தோட்டத்தில் ஆங்காங்கே பூச்சி பிடிப்பான் கருவியை வைத்துள்ளார். இதன் செயல்பாடு குறித்து அவர் கூறுகையில்,‘ ரூ. 3,500 மதிப்புள்ள இந்தக் கருவி சோலார் சிஸ்டத்தில் செயல்படுகிறது. இதில் உள்ள மின்விளக்கு மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஒளிரும். விளக்கின் அடியில் ஒரு தட்டில் சோப்பு கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். விளக்கு வெளிச்சத்தில் ஈர்க்கப்படும் பூச்சிகள் விளக்கை சுற்றி வரும்போது, தண்ணீரில் சிக்கி இறந்துவிடும். நள்ளிரவு 2 மணிக்குப்பின் பறக்கும் பூச்சிகள், பெரும்பாலும் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்தவை என்பதால், அந்த நேரத்தில் விளக்கு ஒளிராது. தினசரி பூச்சிகள் விழுந்துள்ள தட்டிலுள்ள தண்ணீர் மாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தால் பூச்சித்தாக்குதல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT