Published : 27 Apr 2017 10:44 AM
Last Updated : 27 Apr 2017 10:44 AM
‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப அடிப்படை வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் மேம்படுத்தப்படவில்லை.
பல புதுமையான திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. ஊட்டிக்கு அடுத்தபடியாக மக்களை கவர்ந்த கோடைவாசஸ்தலமான கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்கென கடந்த 2 ஆண்டுகளாக மாநில பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
65 லட்சம் பேர்
கொடைக்கானலின் இயற்கையை ரசித்து, குளுமையை அனுபவிக்க ஆண்டுதோறும் 65 லட்சம் பேர் வந்துசெல்கின்றனர். இதில் 70 ஆயிரம் பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில் கூட்டம் களைகட்டுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிசம்பர், ஜனவரி என குளிர்கால மாதங்களை தேர்வு செய்து வந்துசெல்கின்றனர்.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்கள்.
புதுமையான திட்டங்கள்
கொடைக்கானல் வரும் பெரும்பாலானோர், முக்கியமாக செல்லும் சுற்றுலா பகுதிகள் கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ஏரி ஆகியவை மட்டுமே. இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்பதால்தான், மீண்டும் மீண்டும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால், அது மட்டுமே போதுமா? புதுமையான பொழுதுபோக்கு திட்டங்கள் இருந்தால்தானே சிறந்த சர்வதேச சுற்றுலா தலமாக கொடைக்கானலை உயர்த்த முடியும்.
சுற்றுலா பயணிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, அரசும் பல திட்டங்களை கொண்டுவர முடிவு செய்தது. ஆனால், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. போதிய நிதி ஒதுக்கினால்தானே செயல்படுத்த முடியும் என்கின்றனர் அதிகாரிகள். நிதி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அரசு செலவில்லாமல் தனியார் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்தலாம் என்ற யோசனை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது. அதாவது திட்டங்களின் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் உருவாக்கும், அதற்கான செலவினங்களை கட்டணம் மூலம் வசூலிக்கும், பின்னர் அந்த கட்டுமானத்தை அரசிடம் ஒப்படைக்கும். இந்த திட்டத்துக்கு ‘பூட்’ (பில்ட், ஆபரேட், டிரான்ஸ்பர்) என பெயரிடப்பட்டது. ஆனால், இதற்கும் அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருந்தால், ஏரியின் மீது ரோப்கார் அமைப்பது, ஸ்கை வாக் போன்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், ஏனோ அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வந்தால், கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதன் மூலம், சுற்றுலாத்துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
வனச் சுற்றுலா தொடங்கப்படுமா?
மலைகள் நிறைந்த கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் வனத்துறையினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றனர். வனப் பகுதிக்குள் மலையேற்றம் (டிரக்கிங்), மரத்தின் மேல் குடில்கள் அமைத்து இயற்கை சூழலில் தங்கவைப்பது என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், கொடைக்கானலில் இதுபோன்ற வனச்சுற்றுலா திட்டங்கள் எதுவுமே இல்லை.
கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறை பகுதியில் பள்ளத்தாக்கையும், எலிவால் நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் உயரமான கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கோபுரம் வலுவிழந்துள்ளதாகக் கூறி, தற்போது அங்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதை வனத்துறையினர் சீரமைக்க வேண்டும். குணா குகைக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அதன் முகப்பு பகுதியை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. பைன் பாரஸ்ட்டில் பகுதியளவில் மட்டுமே சுற்றுலா பயணிகளால் பார்வையிட முடிகிறது.
இயற்கைக்கு பாதிப்பின்றியும், பயணி களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் வனச் சுற்றுலாவை மேம்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
இயற்கை எழிலை ரசித்தவாறே கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
சில அடிப்படை பிரச்சினைகள்
ஒரு ஊரின் அழகே, அங்கு இருக்கும் சுத்தமும், சுகாதாரமும்தான். குறைந்தபட்சம் ஊரை ‘பளிச்’சென சுத்தமாக வைத்திருந்தாலே அந்த இடம் பலருக்கும் பிடித்தமானதாக ஆகிவிடும்.
ஆனால், கொடைக்கானலில் சுகாதாரம் என்பது எப்போதும் கேள்விக்குறிதான். நகரில் குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. பல இடங்களில் குப்பைகள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. போதிய அளவில் கழிப்பறை வசதியில்லாததால், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். ஆண்கள் பலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத் துகின்றனர். ஆனால், பெண்களின் பாடுதான் மிகவும் திண்டாட்டமாக இருக்கிறது. குறைந்தபட்சம் சீஸன் காலங்களில் மட்டுமாவது முக்கிய சுற்றுலா பகுதிகளில் தற்காலிக கழிப்பறை வசதி, அல்லது நடமாடும் கழிப்பறை வசதியை செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
ஆண்டுதோறும் சீஸன் காலங்களில் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில்லை.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், புதுமையான திட்டங்களையும் செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கொடைக்கானலை வெளிநாடுகளுக்கு இணையான சர்வதேச சுற்றுலா தலமாக்கும் கனவு சாத்தியமாகும்.
வாகனங்களை நிறுத்த வழியில்லை
கொடைக்கானலுக்கு சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததுதான்.
ஒவ்வொரு முறையும் கோடை சீஸன் தொடங்கும்போது மட்டும், வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண சில யோசனைகளை அதிகாரிகள் முன்வைக்கின்றனர். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், பலரும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சுற்றுலா இடங்களிலும் முறையான வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தால், இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்.
பஸ்நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தைப் பெற்று, அதை வாகனங்களை நிறுத்துமிடமாக்கலாம் என்ற திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதேபோன்று, அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கலாம் என்ற திட்டமும், பல ஆண்டுகளாக கனவாகவே உள்ளது.
இது ஒருபுறமிருக்க, வருவாயை ஈட்டுவதற்காக பல சுற்றுலா இடங்களில் நகராட்சி நிர்வாகம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களை நிறுத்த இடமில்லாத சூழல் ஏற்படுகிறது. கடைகளை கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.
குகைக்குள் செல்ல அனுமதியில்லை என்றபோதிலும், முகப்பு பகுதியையாவது பார்த்துவிட்டு வருகிறோம் என்று குணா குகைக்கு ‘பாதயாத்திரை’ செல்லும் சுற்றுலா பயணிகள்
சமூகவிரோதச் செயல்கள் தடுக்கப்படுமா?
கொடைக்கானல் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை திசைதிருப்பும் வகையில், அனுமதியில்லாத காட்டேஜ்களில் அவர்களை தங்கவைத்து, போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் செயல்களில் வழிகாட்டிகள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்காணித்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக புகார் வரும்போது மட்டும் ஆட்சியர் உத்தரவுக்கு இணங்க கடுமையாக நடவடிக்கை எடுப்பதும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் கண்டும் காணாமல் இருந்துவிடுவதுமான செயலை காவல்துறையினர் கைவிட வேண்டும். அனுமதியில்லாத மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் காட்டேஜ்களுக்கு சீல் வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்
கொடைக்கானல் நகரில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் இருக்கும் பெரும் பிரச்சினை குடிநீர் தட்டுப்பாடுதான். இருக்கும் ஒரேயொரு குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் நீர்த்தேக்கத்தில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரைக்கொண்டே குடிநீர் பிரச்சினையை நகராட்சி நிர்வாகம் ஓரளவு சமாளித்து வருகிறது. ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல.
குண்டாறு அணை திட்டத்தை செயல்படுத்தினால்தான், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த திட்டத்தை, அடுத்த கோடை கால சீஸனுக்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொடைக்கானலுக்கு தேவை சார் ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன. இதில் திண்டுக்கல், பழநி ஆகியவற்றில் சார் ஆட்சியர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் உள்ளனர். அதேபோன்று, தற்போது காலியாக உள்ள கொடைக்கானல் வருவாய் கோட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். இதன் மூலம் கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி துரிதப்படுத்தப்படும்.
குறிப்பாக கொடைக்கானல் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம், கனரக இயந்திரங்கள் பயன்பாட்டை தடுத்தல் ஆகிய பணிகளை பாரபட்சமின்றி மேற்கொள்ள நேர்மையும், கண்டிப்பும் மிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை சார் ஆட்சியராக நியமிப்பதன் மூலம், சட்டத்துக்கு புறம்பான செயல்களை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு திகிலான அனுபவத்தை தரும், சீனாவின் ஜாங்ஜியாஜி தேசிய பூங்காவில் உள்ள கண்ணாடி நடைபாலம் (கோப்பு படம்). இதே போன்றதொரு ஸ்கைவாக் பாலம் கொடைக்கானலில் அமையும் கனவு நிறைவேறுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT