Published : 18 Sep 2013 03:36 PM
Last Updated : 18 Sep 2013 03:36 PM
கண்ணெதிரே ஒருவர் அடிபட்டுக் கிடந்தாலும், 'ஓரமா படுக்க வையுங்க சார்' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போகும் இரக்க சிந்தனையாளர்களின் உலகம் இது. அவர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமான காரியம் ஒன்றை செய்திருக்கிறான் சிறுவன் ரிஷி.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் இருக்கிறது திருமுல்லைவாசல் கிராமம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் ரிஷி. பள்ளிக்குள் நுழைந்து ரிஷி என்று சொன்னதுமே நம் கைபிடித்து அழைத்துச் சென்று தலைமையாசிரியர் தமிழ்ச் செல்வனுக்கு முன் நிறுத்தி, 'சார் நம்ம ரிஷியைப் பார்க்க வந்திருக்காங்க' என்று அறிமுகப்படுத்துகிறார்கள் சக மாணவர்கள். திடீர் பிரபலமாயிருக்கும் அந்த சிறுவனுக்கு தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் எதுவும் தெரியவில்லை. என்னவோ ஏதோ என்று பயந்து கொண்டே உள்ளே வந்தவன் கையை கட்டிக்கொண்டு நிற்கிறான். அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஷமீர் பாரிஸுக்கும் சகாபுதீனுக்கும் தகவல் தெரிந்து அவர்களும் அங்கே வருகிறார்கள். இருவரும் உள்ளே நுழைந்ததுமே ரிஷியை பார்த்துவிட்டு ஓடிவந்து கட்டிக் கொள்கிறார்கள்.
''ஞாயித்துக்கிழமை (15.9.13) காலையில நான், அமிருதீன் (இதேபள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்) சகாபுதீன் மூணு பேரும் கடலுக்கு குளிக்கப் போனோம். நேரம் போறது தெரியாம ரொம்ப நேரமா கடல்ல ஆடிக்கிட்டு இருந்தோம். அப்ப, திடீர்னு ஒரு அலை வந்து, அமிருதீனை இழுத்துருச்சு. அவன காப்பாத்துறதுக்காக நானும் சகாவும் பின்னாடியே போனோம். ஆனா, அதுக்குள்ள அவன் ஏழு பாவம் தூரம் (கிட்டதட்ட 200 மீட்டர்) போயிட்டான். பாதி தூரம் போனவுடனே எங்களூக்கும் ஆழம் நிலைக்கல. முழுவ ஆரம்பிச்சட்டோம். ஒருத்தரை ஒருத்தர் பிடுச்சுகிட்டாலும் ஒண்ணும் செய்ய முடியல. ஆனாலும், தாக்கு பிடிச்சு தத்தளிச்சுக்கிட்டே இருந்தோம். அப்பதான் ரிஷி தூரத்தில ஒரு மரத்துல வேகமா வரது தெரிஞ்சுது. அவன், கிட்ட வந்ததும் அந்த மரத்தை எட்டி பிடிச்சுகிட்டோம்”' என்று படபடப்புடன் விவரித்தான் ரிஷியால் உயிர் பிழைத்திருக்கும் சிறுவன் ஷமீர்பாரிஸ்.
"நானும் எங்க தெரு பசங்களும் அங்கதான் குளிச்சிக்கிட்டிருந்தோம். இவனுங்க அந்த பக்கம் குளிச்சுகிட்டு இருந்துருக்காங்க. அமிருதீனை அலை இழுத்துகிட்டு போனதும் எல்லா பசங்களும் மேடேறிட்டானுங்க. பக்கத்துல பெரியாளுங்க வேற யாரும் இல்லை. உடனே நான் எப்பவும் வைச்சு வெளையாடற மரத்தை எடுத்துகிட்டு கடலுக்குள்ள போயிட்டேன். மரத்துல படுத்துக்கிட்டு, வேகமா இவங்ககிட்ட போனேன். கிட்டப் போனதும்தான் பயமே வந்துச்சு. இவங்கள காப்பாத்தப் போயி நம்மளும் சிக்கிக்கிட்டா.. என்ன பண்றதுன்னு பயம். ஆனது ஆகட்டும்னு மரத்துல ஒரு மொனையில நான் படுத்துகிட்டு இன்னொரு மொனையில இரண்டு பேரையும் தொத்த வைச்சேன். அப்படியே கையால தண்ணிய தள்ளி தள்ளியே ரெண்டு பேரையும் கரைக்கு கொண்டாந்துட்டேன்" என்று தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் தெரியாமல் சர்வசாதாரணமாய் சொன்னான் ரிஷி.
தாமதமாக செய்தியைக் கேள்விப்பட்ட மீனவர்கள், படகுகளில் போய் அமிருதீனை மீட்டிருக்கிறார்கள். ஆனால், தண்ணீரை அதிகம் குடித்திருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அமிருதீனின் உயிர் பிரிந்துவிட்டது. அப்போதுதான், இன்னும் இரண்டு சிறுவர்களை ரிஷி காப்பாற்றிய விஷயம் பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்திருக்கிறது.
'' இவனுக்கு கடல்ல பயமே கிடையாது சார். இவன்பாட்டுக்கு நீந்தி நடுக்கடலுக்கு போயிடுவான். ஏதாவது மர துண்டைப் பிடுச்சுகிட்டு நாள்பூராவும் கடல்ல மிதப்பான். இவன் சரியான கடல்சுறா”” என்கிறது ரிஷியின் வாண்டு வட்டம். ‘'அலை வேகமா இருக்கு, பின்னால இழுக்குது, குளிக்க போகாதீங்கடான்னு எங்க தெரு பெரியபசங்க சொன்னாங்க. ஆனா அமிருதீன், அதையெல்லாம் கேட்காமதான் எங்களையும் இழுத்துட்டுப் போனான். ரிஷி மட்டும் இல்லைன்னா அமிருதீன் போன எடத்துக்கே நாங்களும் போயிருப்போம். நாங்க செத்துப் பொழைச்சிருக்கோம்; எங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கான் எங்க ரிஷி. இனி, அவன்தான் எங்களுக்கு கடவுள்” - சகாபுதீனின் இந்த வார்த்தைகளில் புகழ்ச்சி இல்லை, நெகிழ்ச்சிதான் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment