Published : 04 Dec 2013 12:23 PM
Last Updated : 04 Dec 2013 12:23 PM
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணிக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி 86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அமைதியான வாக்குப்பதிவு:
ஏற்காட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
269 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும், வாக்குப்பதிவை வெப் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாப்பநாயக்கன்பட்டி வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவும், பூவனூரில் திமுக வேட்பாளர் மாறனும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் சரோஜா, தேர்தலில் தான் வெற்றி பெற்று தொகுதி மேம்பாட்டுக்காக தன் கணவர் எடுத்த முயற்சிகளைத் தொடர்வேன் என்றார்.
ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள். ஏற்காடு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,190 பேரும், பெண் வாக்காளர்கள் 1,21,094 பேரும், இதர வாக்காளர்கள் ஆறு பேர் என மொத்தம் 2,40,290 பேர் உள்ளனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. பாதுகாப்புப் பணியில், ஆயுதம் ஏந்திய 3000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT