Published : 26 Feb 2014 09:50 AM
Last Updated : 26 Feb 2014 09:50 AM

சென்னையில் நமோ நடமாடும் மீன் கடை திறப்பு: வியாபாரம் கெடுவதாகக் கூறி பெண்கள் கடும் எதிர்ப்பு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் ‘நமோ நடமாடும் மீன் கடை’ சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் (உயிருடன்) மீன் ரூ.500-க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில பாஜக மீனவர் பிரிவு சார்பில், “நமோ நடமாடும் மீன் கடை” திறப்பு விழா மாநில மீனவர் பிரிவு தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு நமோ நடமாடும் மீன் கடையை திறந்து, மீன் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சிறு வயதில் தான் தேநீர் விற்றதை நரேந்திரமோடி பெருமையாக சொல்கிறார். அதை காங்கிரஸ் தலைவர்கள் பண்பாடு இல்லாமல் பேசுகிறார்கள்.

பாஜக தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், தேநீர் விற்றவர் பாஜக பிரதமர் வேட்பாளராக முடியும். நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பாஜக தலைவராகி இருக்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சாதாரணமானவன் இதுபோன்ற உயர் பதவிக்கு வருவதை கனவுகூட காண முடியாது.

சாமானியரை பிரதமராக அமர்த்திப் பார்க்க பாஜக ஆசைப்படுகிறது. பாஜகவினர் நமோ டீக்கடைக்குப் பிறகு இப்போது நமோ மீன் கடை திறக்கிறார்கள். மீனவர்கள் வசிக்கும் பகுதியில் ரிசார்ட்டுகளை கட்டுவதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை பாஜக கண்டிக்கிறது.

கச்சத்தீவில் இந்திய, இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உள்ளது. ஆனால், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

மத்தியில் ஆட்சி மாறும். நரேந்திரமோடி பிரதமரானதும் மீனவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும். மற்ற கட்சியினர் வாக்குறுதிகளைக் கொடுக் கின்றனர். பாஜகவால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். நாங்கள் கடலை தெய்வமாகக் கருதுகிறோம்.

கடல் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் இல.கணேசன்.

“நமோ நடமாடும் மீன் கடை தமிழகம் முழுவதும் 35 இடங்களில் தொடங் கப்படும்” என்று மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

இறுதியில் செய்தியாளர்களின் கேள்விக்கு இல.கணேசன் பதிலளிக்கை யில், “மக்களவைத் தேர்தலில் பாஜக-தேமுதிக கூட்டணி உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தாலும் இரு கட்சியினரும் தொடர்ந்து பேச்சுவார்த் தையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் எதிர்ப்பு

நமோ நடமாடும் மீன் கடையில் விற்பனை நடந்தபோது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்கு வந்து, ‘எங்கள் வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள்’ என்று பலமாகக் கோஷமிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சமாதானப் படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x