Published : 23 Mar 2017 09:17 AM
Last Updated : 23 Mar 2017 09:17 AM
எண்ணெய் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கு குடியிருப்பு பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்ட குழாய் இணைப்பில் ஏற்படும் எண்ணெய்க் கசிவால் ஆர்.கே.நகர் தொகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளில் பிரதானமாக உள்ளது குடிநீர் பிரச்சினை. இத்தொகுதியில் நிலத் தில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்களில் ஏற்படும் எண்ணெய்க் கசிவுதான் இதற்குக் காரணம். கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக் கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு நீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்ற னர்.
இதுகுறித்து, இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் கூறியதாவது:
வெளிநாடுகளிலிருந்து கப்பல் கள் மூலம் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய் சென்னை துறைமுகத்தில் இருந்து மணிலி யில் உள்ள ஐஓசி, சிபிசிஎல் நிறு வனங்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற் காக 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்துக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டது.
சுமார் 20 மீனவ கிராமங்கள் வழியாக இந்தக் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு கச்சா எண்ணெய் நிலத்தடி நீருடன் கலக்கிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு கூட இந்தக் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், ஆழ்துளை குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீருடன், எண்ணெயும் சேர்ந்து வருகிறது. மேலும், கடற்கரையை ஒட்டி இந்தக் குழாய் அமைந்துள்ளதால் கடல் நீருடன் இந்தக் கச்சா எண்ணெய் கலக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கலந்தால் மீன்கள் மட்டுமின்றி, பல கடல்வாழ் உயிரினங்களும் அழியும். இதனால், மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மேலும், இந்தக் குழாயில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் குடியிருப்பு பகுதிகளில் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படும். இந்நிலையில், துறைமுகத்தில் இருந்து கடல் ஓரத்தில் மாற்றுப் பாதையில் புதிய குழாய் அமைக்க சிபிசிஎல் நிறுவனம் திட்டமிட் டுள்ளது. அவ்வாறு கடல் வழியாக கொண்டு சென்றாலும் அது கட லோர ஒழுங்குமுறை மண்டல விதி களை மீறும் செயலாக அமையும்.
எனவே, எண்ணூர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக இந்தக் குழாயை அமைக்கும்படி நாங்கள் சிபிசிஎல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். காரணம், தற்போது அனைத்து தொழிற்சாலைகளின் கழிவுநீரும் இந்தக் கால்வாயில்தான் விடப்படு கிறது. அதனால், எண்ணெய் குழா யில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலும் குடியிருப்பு பகுதியில் பாதிப்பு ஏற்படாது. எனவே இத்தொகுதியில் புதிதாக தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் இப்பிரச் சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இப்பிரச்சினைக் குறித்து, அகில இந்திய மீனவர் சங்கத்தின் செயல் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:
துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்குச் செல்லும் குழாய் இணைப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கொடிமரத் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, கும்பாளம்மன் கோயில் தெரு, ஜீவரத்தினம் சாலை, டி.எச்.ரோடு, நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் வழியாக செல்கிறது. இந்தக் குழாய் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு கச்சா எண்ணெய் நிலத்துக்கு அடியில் கசிகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.
மேலும், இந்தக் குழாய்க்கு அருகிலேயே குடிநீர் செல்லும் குழாயும் செல்கிறது. எண்ணெய் குழாயில் ஏற்படும் கசிவால் கச்சா எண்ணெய் குடிநீருடன் கலந்து விடுகிறது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமின்றி ஒட்டுமொத்த வடசென்னைப் பகுதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் 60 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
தற்போது, சிபிசிஎல் நிறுவனம் கடல் ஓரத்தில் மாற்றுப் பகுதியில் குழாய் அமைக்க முடிவு செய்துள்ளது. சுமார் 9 அடி ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம், சிபிசிஎல் நிறுவனத்துக்கு இடையே 26 கி.மீட்டர் தூரம் உள்ளது. இதனால், குழாய் அமைக்க அதிகளவு செலவாகும். அதே சமயம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து சிபிசிஎல் நிறுவனத்துக்குச் செல்ல வெறும் 11 கி.மீட்டர் தூரம்தான் உள்ளது. அத்துடன், சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் எண்ணெய் இறக்குமதி செய்ய 3 நாட்கள் ஆகும் எனில், எண்ணூர் துறைமுகத்தில் ஒரே நாளில் எண்ணெய் இறக்குமதி செய்யலாம். இதனால், ஒட்டு மொத்த செலவினமும் குறையும். இந்த மாற்றுத் திட்டத்தை செயல் படுத்துமாறு மீனவர் சங்கங்கள் சார்பில் சிபிசிஎல் நிறுவனத்துக்கு ஆலோசனை கூறியுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT