Published : 21 Jan 2017 11:09 AM
Last Updated : 21 Jan 2017 11:09 AM

பவானியின் குறுக்கே தொடங்கியது 3-வது தடுப்பணை கட்டுமானப் பணி: வேகமெடுக்கும் கேரள அதிகாரிகள்; சுறுசுறுப்பில்லாமல் தமிழக அதிகாரிகள்?

அட்டப்பாடியில் பவானிக்கு குறுக்கே புதிய அணைகள் கட்டப்படுவதையொட்டி அந்தப் பணிகள் நடக்கும் சர்ச்சைக்குரிய அணைப் பகுதிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்கள் செல்லாத வண்ணம் கெடுபிடிகளை கேரள அதிகாரிகள் அதிகப்படுத்தியுள்ளதுடன், அணைகளின் கட்டுமானப் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் முக்காலிக்கு கீழே 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டத் திட்டமிட்டு 3 அணை பணிகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு.

இதன் மூலம் பவானியிலிருந்து சுமார் 6 டிஎம்சி நீர் எடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அட்டப்பாடி சிறுவாணி ஆற்றில் சித்தூர் வெங்கக்கடவு பகுதியில் 1980-ல் அணைகட்ட முயற்சித்து பணிகளைத் தொடங்கி பாதியில் நிறுத்தியிருந்தது கேரள அரசு.

பிறகு 2003-ல் பவானியில் முக்காலி பகுதியில் ஓர் அணை கட்ட முயற்சி எடுக்க தமிழகப் பகுதி விவசாயிகள், கட்சி அமைப்புகள் கொந்தளித்தன.

இங்கு அணைகள் கட்டுவதன் மூலம் தமிழகத்தின், குறிப்பாக கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமான பவானி நதி வறண்டுபோகும். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ள 20 குடிநீர்த் திட்டங்களும் காணாமல்போகும் என்ற விஷயங்களை முன்னிறுத்திப் போராடியதால், அணை கட்டும் முயற்சி மத்திய அரசு தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. 2012, 2016-ம் ஆண்டுகளில் மறுபடியும் சித்தூர் வெங்கக்கடவு சிறுவாணிக்கு குறுக்காகவும் அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு இறங்க, மறுபடியும் தமிழக விவசாயிகள், கட்சி, அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பல்வேறு செய்திகளை ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது.

அதையடுத்து, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அட்டப்பாடியில் அணை கட்டக் கூடாது என்று மத்தியஅரசு கேரள அரசுக்கு எச்சரித்தும் உள்ளது. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக அமைதியாக இருந்த கேரள அரசு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அட்டப்பாடி தேக்குவட்டை கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணியை முடுக்கி விட்டது. பிறகு 5 நாட்கள் முன்பு மஞ்சிக்கண்டி என்ற இடத்திலும் தடுப்பணை கட்டும் பணியில் கேரள அதிகாரிகள் இறங்கினர். இது தமிழகப் பகுதி விவசாயிகள், கட்சி அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இன்று (ஜன. 21) மாலை 4 மணிக்கு கோவையில் மனித சங்கிலிப் போராட்டமும், வரும் 29-ம் தேதி கேரளத்தில் அணை முற்றுகைப் போராட்டமும் நடத்த உள்ளதாக பெ.தி.க., திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய, வியாபாரிகள் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதைப் பற்றியும் விரிவான செய்தி ‘தி இந்து’வில் வெளியானது.

இதையடுத்து, செயல்பாட்டில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர் கேரள அதிகாரிகள். தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி (இரண்டு கிராமங்களுக்கும் 8 கிலோமீட்டர் தொலைவு இடைவெளி) அணைப் பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த 50 லோடு கருங்கல் ஜல்லிகளை வெளியே தெரியாத வகையில் அப்புறப்படுத்திவிட்டனர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்.

300 பணியாளர்கள்

அதேசமயம், முன்பு 50 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது பணிபுரிவோரின் எண்ணிக்கையை 300-ஆக உயர்த்திவிட்டனர். முன்பு 3 பொக்லைன் இயந்திரங்கள் மட்டுமே காணப்பட்டன. இப்போது 7-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயங்குகின்றன. தவிர, பாடவயல் கிராமத்தில் ஓடும் பவானிக்கு குறுக்காகவும் 3-வது அணைப் பணியை ஆரம்பித்தும் உள்ளனர்.

இதுதவிர, தமிழகத்திலிருந்து இந்த அணைப் பணிகள் நடக்கும் பகுதிகளுக்கு வரும் தமிழக வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகக் கட்சிகள், அமைப்புகள் சார்ந்தவர்களின் வாகனங் களோ, தமிழக மீடியாக்களின் வாகனங்களோ இந்தப் பகுதிகளுக்குள் அனுமதிப்பதில்லை. அதற்கென சாவடியூர் பகுதியில் திடீர் சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டு, கேரள போலீஸார் விசாரணைக்குப் பிறகு, சர்ச்சைக்குரியதல்லாத தமிழ்நாட்டு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறும்போது, “அட்டப்பாடியில் மட்டும் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் விவசாயமே தொழில். இவர்களில் 60 சதவீதம் பேர் அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்குள் வருகிறார்கள். இந்த புதூர் பஞ்சாயத்துக்குள் வருபவைதான் புதிதாக கட்டப்படும் 6 தடுப்பணைகள். இந்த அணைகள் கட்டப்படும் பகுதிகளுக்குச் செல்லவேண்டுமென்றால், மன்னார்காடு சாலையில் தாவளத்துக்கு (தமிழக ஆனைகட்டியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவு) முன்பாக இருக்கும் கீழ்தாவளத்தில் வலது பக்கம் பிரியும் சாலையில் திரும்ப வேண்டும்.

அங்கேயே முக்காலியிலிருந்து வரும் பவானி ஆறு வடக்கு நோக்கிச் செல்கிறது. அதில் 2-வது கிலோமீட்டர் தொலைவில் பாடவயல் கிராமம் வருகிறது. இங்கேதான் முதல் தடுப்பணை உருவாகிறது. அதையடுத்து 2 கிலோமீட்டர் தொலைவில் மஞ்சக்கண்டி கிராமம். இங்கே 2-வது அணைக்கான பணிகள் நடந்த கொண்டிருக்கிறது. அதைத்தாண்டி 3 கிலோமீட்டர் தொலைவு தேக்குவட்டை. இங்கேதான் 10 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அணைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நதியை ஒட்டிச் செல்லும் மலைக்காடுகள் அடர்ந்த சாலையிலேயே பயணம் செய்தால் 8 கிலோமீட்டர் தொலைவில் எட்டுவது புதூர் பஞ்சாயத்து. இதற்குள் மீதி 3 அணைகளும் கட்டப்பட உள்ளன.

இந்த புதூர் கிராமத்தை அடைவதற்கு தாவளம் செல்ல வேண்டியதில்லை. தமிழகத்தின் ஆனைகட்டி கிராமத்திலிருந்து மன்னார்காடு செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டத்துறை கிராமத்தில் வலதுபக்கம் பிரியும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் புதூர் கிராமம் அடையலாம். அந்த புதூருக்கு முன்பே 3 கிலோமீட்டர் தொலைவில் சாவடியூர் உள்ளது. இதுதான் புதூருக்கு நுழைவுவாயில். இங்கே வரும் தமிழகத்து வாகனங்கள் எல்லாமே தற்போது சோதனையிடப்படுகிறது. சந்தேகத்துக்குரிய வாகனங்கள் மன்னார்காடு சாலைக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதே போல, கீழ்தாவளம் அருகே திரும்பும் வலதுபுறம் சாலையிலும் தமிழகத்து வாகனங்கள் சோதனை யிடப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன என்றனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, “கடந்த சில நாட்களாக தமிழக உளவுப் போலீஸாரும் இங்கே வந்து செல்கின்றனர். இந்த அணை கட்டப்படுவது குறித்தும், அதற்கு மாவோயிஸ்ட்கள் ஆதரவா, எதிர்ப்பா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். அதேசமயம், கேரள போலீஸாரும் வருகிறார்கள். தமிழகப் பகுதிகளுக்கு அணை குறித்த தகவல்கள் சொல்லுபவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வந்து கேட்டால், எதுவும் பேசக்கூடாது. அதை மீறி சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கையும் செய்கிறார்கள். நாங்கள் யாருக்கு பயப்படுவது என்றே தெரியவில்லை” என்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆதிவாசிகளின் நிலம் ஆதிவாசிகளுக்கே’ என்ற நோக்கில் போராட்டங்கள் பல நடந்தன. அதில், தமிழக விவசாயிகளிடம் இருந்த சில நிலங்களில் வலுக்கட்டாயமாக பழங்குடி மக்கள் சென்று குடியேறுவதும் நடந்தது. அப்படியான நிகழ்வுகளில், தமிழகத்திலிருந்து சென்ற விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர். தமிழக கட்சிகளிடம் ஆதரவு திரட்டவும் ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களை மாவோயிஸ்ட் முத்திரை குத்தி உள்ளே அனுப்பி விடுவதாக போலீஸ் தரப்பில் மிரட்டல்கள் நடந்ததாகவும் கூறப்பட்டது. அதேபோல, தற்போதும் இந்த அணைகள் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிடுவதாக மறுபடி போலீஸ் தரப்பில் அச்சுறுத்தல் வருவதாக தெரிவிக்கின்றனர் இப்பகுதிவாசிகள்.

இதனால் இங்குள்ள தமிழர்கள் யாரும் புதிதாக உருவாகும் அணைகள் பற்றிய விவரத்தை பேசவே அச்சப்படுவதை காணமுடிகிறது.

15 அடி அஸ்திவாரம்

இதுகுறித்து மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் அறிவித்துள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் ‘தி இந்து’விடம் கூறியது: கேரள அரசு குறிப்பிட்ட பகுதியில் அணைப் பணிகளை துரிதப்படுத்தி செயல்படுவதை நேராகவே கண்டு வந்துள்ளோம். ஆனால், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் இன்னமும் அங்கே அணைப் பணிகளுக்கான ஆய்வை மட்டுமே நடத்துவதாகவும், அதைப்பற்றி தமிழக அரசுக்கு அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆய்வு செய்பவர்கள் எதற்கு ஜல்லிக்கற்களை கொட்ட வேண்டும்? பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டுவந்து ஆற்றுப் பகுதியை ஒரு பக்கம் சமப்படுத்த வேண்டும்? பாதி ஆற்றை மறித்து 15 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்ட வேண்டும்? நூற்றுக்கணக்கில் ஆட்கள் பணி செய்ய வேண்டும்? தமிழக அதிகாரிகள் அங்கே ஆய்வு செய்ய சென்றபோது கூட தடுத்து அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். இதுதான் அங்கே ஆய்வு நடக்கிறதற்கான அர்த்தமா?

இதைப்பற்றி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முழுமையான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பவானிசாகர் பொதுப்பணித் துறை அலுவலர் கூறும்போது, “காவிரி நதி நீர் பங்கீட்டின்படி கபினியில் 21 டிஎம்சி, பவானியில் 6 டிஎம்சி, அமராவதியில் 3 டிஎம்சி நீரை கேரளா எடுத்துக் கொள்ள உரிமை உள்ளது. எனினும், வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை அவர்கள் செய்யமுடியாது. ஒருவேளை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக வழக்கில் தீர்ப்பு வாங்கியுள்ளார்களா என்று தெரியவில்லை. கேரளத்தில் அணைப்பணிகள் நடப்பதை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசு கேரள அரசிடம் பேசி முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். அதற்காக நம் களப் பணியாளர்களை கேரள பவானிப்பகுதிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை வாங்கியுள்ளோம்.

பாடவயல், தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி பகுதிகளில் அவர்கள் கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது உண்மை. அதை தமிழக அரசுக்கு அனுப்பி, கேரள அரசிடம் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான அனுமதி பெற கேட்டுள்ளோம். என்றாலும் இவர்கள் இந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதை கண்டு தமிழகத்தில் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இந்த பகுதிகள் மலைகள் நிறைந்த பகுதி. இன்னொரு பக்கம் சாலை அமைந்துள்ளது. பெரிய அளவில் அணை கட்டவே முடியாது. சிறிய தடுப்பணைகள் கட்டி சிறிய அளவில் மட்டுமே நீர் எடுக்க முடியும். அதில் இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை மட்டுமே தீர்க்கமுடியும். பவானியில் முக்காலியிலும், சிறுவாணியில் சித்தூர் வெங்கக்கடவிலும் அணை கட்டினால் மட்டுமே அவர்கள் குறிப்பிட்ட 6 டிஎம்சி தண்ணீரை எடுக்க முடியும். அது மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x