Published : 26 Aug 2016 09:06 AM
Last Updated : 26 Aug 2016 09:06 AM

தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவு: மாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்றுத் தர கண்காணிப்பில், தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை ஆகிய தமிழக நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு நகரத்தில் எவ்வளவு மாசு ஏற்படுகிறது? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும், அதை மக்கள் தெரிந்துகொண்டு, மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில், ‘தேசிய சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு திட்டம்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 41 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து காற்றின் தரம் கண் காணிக்கப்பட்டு, அதன் விவரங்கள் தினமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளி யிடப்பட்டு வருகிறது. அதில் காற் றின் தரத்தை பொருத்து, அன்றைய தினம், நன்று, திருப்திகரம், மிதமான மாசு, மாசு, மிகை மாசு, கடுமையான மாசு என 6 வகையாக குறிப்பிடப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல் தொகுப் பின் முதல் பதிப்பை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

கோவை முதலிடம்

அதில் காற்றின் தரம் ‘நன்று’ குறியீட்டை அதிக நாட்கள் பெற்ற நகரங்கள் பட்டியலில், கோவை மாநகரம் முதலிடத்தையும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கோட் 2-ம் இடத்தையும், அகமதாபாத் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

வாரணாசி மோசம்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, அலகாபாத், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ஆகிய நகரங்கள் ஒரு நாள்கூட ‘நன்று’ குறியீட்டை பெறவில்லை. அப்பகுதிகளில் காற்று எப்போதும் மாசு நிறைந்துள்ளது.

கடலோர நகரங்களில் மாசு குறைவு

உட்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை விட, கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நகரங்க ளில் காற்றின் தரம், அதிக அளவிலான நாட்களில் ‘நன்று’ குறியீடு பதிவாகியுள்ளது.

பெரும்பாலான நகரங்களில் அதிக அளவிலான ‘நன்று’ நாட்கள், பருவமழை காலத்திலேயே பதிவாகியுள்ளன. குறைந்த அளவிலான ‘நன்று’ நாட்கள் குளிர் காலத்தில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக நகரங்களில் மாசு குறைவு

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட பட்டியலில், காற்றின் தரம் ‘நன்று’ என்ற குறியீட்டை அதிக நாட்களில் பெற்ற முதல் 10 நகரங்களில் தமிழக நகரங்களான கோவை முதல் இடத்தையும், மதுரை 4-ம் இடத்தையும், சென்னை 7-ம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னையில்தான் அதிக நாட்கள் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதிக நாட்கள் ‘நன்று’ குறியீட்டையும் பெற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஒருவர் கூறும்போது, “தமிழகம்தான் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையின் அளவை கண்காணிக்க முதல் முறையாக ஆன்லைன் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தியது. இதை தற்போது மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இதன் மூலம் தொழிற்சாலைகள் காற்று மாசு ஏற்படுத்தினால் உடனே எங்களுக்கும், தொழிற்சாலைக்கும் அலாரம் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். அதைக் கொண்டு நாங்களும் தொழிற்சாலையை அறிவுறுத்தி, தொழிற்சாலை மாசை கட்டுப்படுத்தி வருகிறோம். இதனால் தமிழகத்தில் தொழிற்சாலையால் ஏற்படும் காற்று மாசு குறைந்துள்ளது.

வாகன புகை தடுப்பு

வட மாநிலங்களைப் போன்று புகையை கக்கும் பழைய வாகனங் களை தமிழக சாலைகளில் பார்ப்பது அரிது. அதற்கு போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து காவல் துறையும் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகள்தான் காரணம்.

உள்ளாட்சிகள் நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட நகரங் களில் சாலைகளை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பரா மரிப்பதால், புழுதி பறப்பதும் குறைவாக உள்ளது. அதனாலும் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x