Published : 25 Jul 2016 01:21 PM
Last Updated : 25 Jul 2016 01:21 PM

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணியா?- மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமான நட்பு பாராட்டும் ஜி.கே.வாசன்

மதுரையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு, பாலாறு அணை விவகாரத்தில் அவரது கருத்தை வரவேற்பது உள்ளிட்ட திமுகவுக்கு இணக்கமான கருத்துகளை ஜி.கே.வாசன் வெளியிட்டு வருவதால், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா கடைசி வரை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடவே விரும்பியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்து போட்டியிட்டது. இக்கூட்டணி தோல்வியடைந்ததால் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறிவிட்டது.

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியைப் பலப்படுத்த ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சோர்ந்து கிடக்கும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார். இக்கூட்டங்களில் ஜி.கே.வாசன், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புள்ளது, நம்பிக்கையுடன் இருங்கள் எனக் கூறி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜி.கே.வாசனும் எதிர்பாராத வகையில் சந்தித்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் தனிமையில் அமர்ந்து பேசினர். அப்போது அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதித்ததாக தகவல்கள் வெளியாயின. இதைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இதுவரை இருவரும் மவுனம் காத்து வந்தனர்.

சமீபத்தில் மதுரை வந்த ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள், மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றி கேட்டபோது அவர், அந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமானது, இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதித்தோம் என ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, பாலாறுக்கு குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தையும், அவர் மக்களை நேரடியாக சந்தித்து வருவதையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

ஸ்டாலினுடன் ஜி.கே.வாசன் நட்பு பாராட்டும் விதம் உள்ளாட்சித் தேர்தலில் திமுக- தமாகா கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமாகா மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் விருப்பம் இல்லாமலேயேதான் சேர்ந்தார். அந்த நேரத்தில் சில சீட்டுகளுக்காக அதிமுகவுடன் கட்சி கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம், கட்சி தொடங்கியதற்கான கொள்கையையும், கட்சியின் எதிர்கால திட்டத்தையும் கேள்விக்குறியதாக்கி இருக்கும் என நினைத்தார்.

அதனால், தோற்றாலும் பரவாயில்லை என்ற நோக்கத்திலேயே மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலில் பலமான கூட்டணியில் சேரவே அவர் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, மாநிலம் முழுவதும் கட்சி வலுவாக வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தமாகாவை கூட்டணியில் சேர்க்க திமுகவும் விரும்புகிறது. ஆனால், அதற்கு ஒரே தடையாக இருப்பது காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிப்பது மட்டுமே. அதற்காக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணவும் வாய்ப்பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x