Published : 17 Sep 2016 03:22 PM
Last Updated : 17 Sep 2016 03:22 PM
பழுதடைந்திருந்த பாலத்தின் கைப்பிடிச்சுவரை சீரமைக்க அரசுத்துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மறந்துவிட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதை சீரமைத்துள்ளனர்.
இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் திருவாரூர் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்.
தண்டலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தண்டலை, மேப்பாடி, சிங்களாஞ்சேரி, நாங்கரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 116 பேர் படித்து வருகின்றனர்.
தண்டலை கிராமத்தையும் சிங்களாஞ்சேரி, நாங்கரை கிராமத்தையும் இணைக்கும் வகையில் வாளவாய்க்கால் குறுக்கே பழமையான பாலம் ஒன்று உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் மோதியதில் இந்த பாலத்தின் கைப்பிடிச்சுவர் இடிந்து விட்டது. மேலும், போதிய பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் இருபுறங்களிலும் இருந்த கைப்பிடிச்சுவர்கள் மற்றும் பைப்புகள் சேதமடைந்து விட்டன. இதனால், இந்த பாலத்தை கிராம மக்கள் அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்திலிருந்து ஒரு குழந்தை விழுந்து இறந்துள்ளது. மேலும், சில மாடுகளும் விழுந்து இறந்துவிட்டன.
பாலத்தின் கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தீர்க்கப்படாமலேயே இருந்தது.
இந்தநிலையில், பள்ளி மாணவர்கள் முயற்சி எடுத்து பாலத்தின் கைப்பிடிச் சுவரை சீரமைக்க பள்ளியின் தலைமையாசிரியர் கே. சண்முகம் அறிவுறுத்தலின்பேரில், ஆங்கில ஆசிரியர் டி.புண்ணியமூர்த்தி வழிகாட்டி ஆசிரியராக இருந்து இந்த பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. பெற்றோர், ஆசிரியர் கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பணிக்காக மாணவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் ரூ.7 ஆயிரம் வசூலித்தனர். மேலும், சிமென்ட், ஜல்லி, மணல், கல், பைப், கம்பி உள்ளிட்ட பொருட்களை கிராம மக்கள் சிலர் வழங்கினர்.
இதை வைத்து, கட்டுமானத் தொழிலாளர்களைக் கொண்டு பாலத்தின் இருபுறமும் கைப்பிடிச் சுவர் கட்டுமானப் பணி முழுமையாக முடிக்கப்பட்டு, முழுவதும் வெள்ளையடித்து அழகுபடுத்தப்பட்டது.
இதுகுறித்து, இந்த பணிக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் டி.புண்ணியமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறியபோது, “பள்ளி மாணவர் சேர்க்கைக்காக சிங்களாஞ்சேரி, நாங்கரை கிராமங்களுக்கு நாங்கள் சென்றிருந்தபோது, பாலத்தில் கைப்பிடிச்சுவர் இல்லாததால் குழந்தைகளை தனியே பள்ளிக்கு அனுப்ப கிராம மக்கள் தயக்கம் காட்டினர். இந்த வழியாக தான் தினந்தோறும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே, தான் பள்ளி மாணவர்களை வைத்தே இந்த பணியை செய்ய திட்டமிட்டோம்.
இதற்கு பெற்றோர்கள், கிராம மக்கள் உறுதுணையாக இருந்தனர். 15 நாட்களில் இந்த பணியை முடித்துள்ளோம். பணியை முடித்த பிறகு அரசு அதிகாரிகளும், கிராம மக்களும் பள்ளி மாணவர்களை பெரிதும் பாராட்டினர்” என்றார்.
7 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த பாலத்தைச் சீரமைத்த மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
விருது பெற்ற மாணவர்கள்...
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய போட்டியில், இந்தப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி கழிவறைக்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களால் மேற்கூரை அமைத்து கடந்த ஆண்டு மாற்றத்துக்கான வடிவமைப்பு விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT