Published : 12 Mar 2017 09:15 AM
Last Updated : 12 Mar 2017 09:15 AM
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 3-ம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்ஹா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்த லில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணை யமும் மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டை இரண்டு வாரங் களுக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்வது, வேட்பாளர்களுக்கான உச்சபட்ச வயது வரம்பை நிர்ணயம் செய்வது குறித்தும் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்தின் கருத்தைக் கேட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நீதிபதிகள் சுட்டிக்காட்டிய இந்த மூன்று அம்சங்கள் குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல்கட்சி பிரமுகர் களின் கருத்தைக் கேட்டோம்.
ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்):
நிரந்தரமாக கிரிமினல் குற்றவாளி களாக இருந்து தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிப் பதில் தவறில்லை. தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவைதான். ஆனால், அப்படி வரும்போது ஒருவரது நேர்மையும் அனுபவமும் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல், உடம்பில் தெம்பிருக் கிற வரை பொது வாழ் வுக்கு ஓய்வு தேவையில்லை.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்):
தண்டனை பெற்ற குற்ற வாளிகள் தேர்தலில் போட்டியிட மட்டுமின்றி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பட்டப்படிப்பாவது அடிப்படை கல்வியாக இருக் கட்டும். தேர்தலில் போட்டியிட உச்சபட்ச வயதுவரம்பு தேவை யில்லை.
ஹெச்.ராஜா (பாஜக தேசிய செயலாளர்):
வாழ்நாள் தடைவிதிக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன். அதுமட்டுமல்ல. அதுமாதிரியானவர்கள் அரசியல் கட்சிகளில் எந்தப் பொறுப்பை வகிக் கவும் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற வேட் பாளர்களுக்கு மட்டுமாவது குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட வேண்டும். அனுபவம் என்பதே வயதானால்தான் கூடு கிறது என்பதால் தேர்தலில் போட்டி உச்சவரம்பு தேவை என்பதில் நான் உடன்படவில்லை.
வைகை செல்வன் (அதிமுக செய்தி தொடர்பாளர்):
குற்ற வழக்கில் தண்டனைபெற்று ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவதுதான் மனிதநேயம். இதைத்தான் சட்டமும் நீதியும் சொல்கிறது. எனவே, வாழ்நாள் தடை என்பது தேவையற்றது. வேட்பாளரின் கல்வித் தகுதியும் வயது வரம்பும் அவரது சமூக சேவைக்கும் தொண்டுக்கும் தடையாக இருக்கக்கூடாது.
திருச்சி என்.சிவா எம்.பி. (திமுக கொள்கை பரப்புச் செயலாளர்):
குற்ற வழக்காக இருந்தாலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே அதற்கான தண்டனை தீர்மானிக்கப்பட வேண்டும். அதேசமயம், அரசுப் பதவி சம் பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் வாழ்நாள் தடை போன்ற உச்சபட்ச தண்டனை அளிப்பதில் தவறில்லை. உடலும் மனதும் ஒத்துழைக்கும் வரை பொதுவாழ்க்கையில் யாருக் கும் தடைபோட வேண்டாமே.
பாலபாரதி - மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்:
வாழ்நாள் தடை என்பது தேவையில்லாதது. கல்வி மட்டுமே மனிதனுக்கு அறிவை தந்துவிடாது. தேர்தலில் போட்டியிட உச்சவரம்பும் தேவை யில்லை. இந்த மூன்று பிரச் சினைகளுக்கும் ஒரே தீர்வு, வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வது மட்டுமே.
இளங்கோவன் - பொருளாளர் தேமுதிக:
தண்டனை குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை என்பதை வரவேற்கிறேன். அதிகம் படிக்காத காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற வர்கள் மக்கள் சேவகர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே, பொதுவாழ்க்கைக்கு கல்வி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அரசியலுக்கு வயது வரம்பு தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT