Published : 07 Feb 2017 04:52 PM
Last Updated : 07 Feb 2017 04:52 PM
வனப்பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் தராததோடு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் ஒரு பகுதியை அபகரித்தும் கொள்கிறார்கள் வனத்துறையை சேர்ந்த அலுவலர்கள் சிலர் என்ற புகார் கிளம்பியுள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் இதில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் வேட்டை தடுப்புக் காவலர்கள்.
வனத்துறை வனவர்கள், ரேஞ்சர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் யாவரையும் அடர்ந்த வனங்களுக்குள் வழிகாட்டியாக செல்பவர்கள் வேட்டை தடுப்புக் காவலர்கள். காடுகளுக்குள் வனவளங்கள் காக்கப்படுவதிலிருந்து வன மிருகங்கள் எந்த திசையில் இருக்கிறது; எத்தனை இருக்கிறது என்பவற்றை கண்காணிப்பது முதல் அவை ஊருக்குள் வந்துவிட்டால் அவற்றை திரும்ப காட்டுக்குள் விரட்டி விடுவது வரை ஏராளமான பணிகள் இவர்களைச் சார்ந்தது.
அப்படிப்பட்ட முக்கியமான பணியை செய்யும் இவர்கள் வனத்துறையில் ஒப்பந்த கூலியாகவே வைக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை முறைகேடாக பயன்படுத்தும் அரசு அலுவலர்களுக்கு பணிந்தே ஆக வேண்டும். பணியாவிட்டால் பணியிட மாற்றம் செய்வதும், அவர்களை வேலையை விட்டே விரட்டி விட்டு தங்களுக்கு தோதான ஆட்களை வேலையில் அதிகாரிகள் வைத்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்காமல் 2- 3மாதங்கள் இழுத்தடிப்பது நடந்து வந்தது. இதைப்பற்றி 'தி இந்து'வில் கடந்த ஆண்டே செய்திகள் வெளியானது. அதற்குப்பிறகு ஓரளவு இந்த பிரச்சினை களையப்பட்டது.
இந்த சூழலில் 3 மாதங்களுக்கு முன்பு வால்பாறை அக்காமலை பகுதியில் 2 வன அலுவலர்களுடன் ரோந்து சென்ற வேட்டை தடுப்புக் காவலர் கணபதி என்பவர் காட்டு மாடு துரத்தியதில் மாரடைப்பு வந்து இறந்தார். அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை வைத்தனர் இப்பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்புக் காவலர்கள்.
அதை வனத்துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தை முற்றுகையிட்டனர் இந்த ஊழியர்கள். 'சாதாரணமாக பொதுமக்கள் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தாலே ரூ.3 லட்சம் வரை நஷ்ட ஈடு அளிக்கும் அரசு, வனத்தை காப்பாற்றும் ஊழியர்கள் வனவிலங்குகள் விரட்டும் பணியின் போது இறந்தால் எதுவும் தருவதில்லை!' என அவர்கள் கோபப்பட்டு, ஏற்கெனவே இப்படி இறந்த வேட்டை தடுப்புக் காவலர்களையும், அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பட்டியலிட்டனர். அதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அப்போதைக்கு குறிப்பிட்ட ஒரு நிதியுதவியை செய்து அமைதிப்படுத்தினர் அதிகாரிகள். இதுவும் 'தி இந்து'வில் செய்தியாக வெளியானது.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் மூன்று மாதங்களாக தங்களுக்கு சம்பளம் தரவில்லை என்று டாப்ஸ்லிப்பில் திடீர் மறியலில் இறங்கினர் 50க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்புக் காவலர்கள். அவர்களையும் அப்போதைக்கு சமாதானம் செய்து அடுத்த நாளே சம்பளத்தைப் பட்டுவாடா செய்து விட்டனர் அலுவலர்கள். என்றாலும் இந்த பிரச்சினை இன்னமும் வேட்டை தடுப்புக் காவலர்களிடம் குமுறலாக வெளிப்பட்டு வருகிறது.
அதன் உச்சகட்டமாகத்தான் தங்கள் சம்பளத்தை தனக்கு மேலுள்ள அலுவலர்கள் பிடித்தம் செய்துவிட்டே தருகின்றனர் என்ற புகாரை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர் இவர்கள். இதுகுறித்து சில வேட்டை தடுப்புக் காவலர்கள் கூறியதாவது:
''தமிழகம் முழுக்க வேட்டை தடுப்புக் காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லாம் 30 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த சம்பளத்திலேயே உள்ளனர். எங்களுக்கு ரூ.7906 என்பதுதான் மாத ஊதியம். இந்த ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசிடமிருந்து கருவூலத்திற்கு வந்துவிடும். அந்த காலகட்டத்தை கவனித்து சம்பளம் கொடுக்க முடியாது என்பதால் புலிகள் காப்பகத்தின் பெயரால் ஓர் அறக்கட்டளை இயங்குகிறது. அதற்கு பல வகைகளில் நிதி வருகிறது.
அந்த நிதியை எங்கள் ஊதியத்திற்காக மாதந்தோறும் பயன்படுத்தி விட்டு, எங்களுக்கான ஊதியத்தொகை கருவூலத்தில் வரும்போது அதை இதனுடன் இணைத்து கணக்கில் கொண்டு வந்துவிடுவார்கள். அப்படி மாதந்தோறும் சம்பளத்தை எங்களுக்கு மேலுள்ள அலுவலர்தான் வழங்குவார். அவர் எப்போது வழங்குவார்; எவ்வளவு, எப்படி வழங்குவார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். அதற்காக அவர் சொன்னபடியெல்லாம் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் சம்பளம் குறையும். இடம் மாற்றம் வரும். அல்லது அவர் கொடுக்கும் நெருக்கடியில் வேலையை விட்டே போக வேண்டிய சூழல் ஏற்படும்.
அப்படி நிறைய வேட்டை தடுப்புக் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு கூட வங்கிக்கணக்கில்தான் கூலியை செலுத்துகிறார்கள். அவர்கள் ஏடிஎம்மிலேயே போய் சம்பளத்தை எடுக்கிறார்கள். ஆனால் இங்கே மட்டும் அதை உயர் அதிகாரிகள் செய்வதே இல்லை. இப்படி ஒரு பிரச்சினை கிளப்பினால் ஒரு மீட்டிங் போடுவார்கள். கீழ்நிலை அதிகாரிகள், மேல்நிலை அதிகாரிகளுக்கு என்ன சொல்வார்களோ தெரியாது. எங்கள் கோரிக்கை கண்டு கொள்ளாமல் விடப்படும். யார் புகார் தெரிவித்தார்களோ அவர்கள் பழிவாங்கப்படுவார்கள்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்ஸ்லிப் உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் உள்ளன. டாப்ஸ்லிப்பில் மட்டும் 90 வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரும் 6 வனச்சரகங்களில் மட்டும் 300 பேருக்கும் மேல் வேட்டை தடுப்புக் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இதேபோல் மாவட்டம் முழுக்கப் பார்த்தால் சுமார் 20 வனச்சரகங்கள் உள்ளன. இப்படி உள்ள ஒவ்வொரு வனச்சரகத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் 50 முதல் 110 பேர் வரை வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோருமே அந்தந்த வனச்சரகத்தில் உள்ள அலுவலருக்கு கட்டுப்பட்டு எல்லாமே செய்ய வேண்டி உள்ளது.
அங்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அலுவலர்கள் மட்டுமே எங்களுக்கான சம்பளத்தை முழுதாக கண்ணில் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாக சிலர் நீதிமன்றம் சென்று தங்களைப் பணி நிரந்தரம் செய்து கொண்டார்கள். அப்படி சுமார் 148 பேர் பணி நிரந்தரம் பெற்று சிறப்புக்கால ஊதியமுறையில் சுமார் ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் நேரடியாக அரசிடம் ஊதியம் பெறுபவர்களாக உள்ளார்கள்.
அதேபோல் பணி நிரந்தரம் கோரி தற்போது 135 பேர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அது நிலுவையில் உள்ளது. இவர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லோருமே அந்த வனச்சரகத்தின் அலுவலர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டிய நிலை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு இயங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதைப்பற்றி வனத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் எல்லாருக்கும் அவ்வப்போது மனுக்கள் மூலம் தெரியப்படுத்தியும், நேரில் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எடுத்துச் சொல்லியும் வந்துள்ளோம். இப்போது நாங்கள் பிரச்சினை செய்து மறியலில் ஈடுபட்ட பின்பு அரசு செல்லா நோட்டு பிரச்சினை, பணப்பரிவர்த்தனையில் சிக்கல் போன்றவற்றை காரணம் காட்டுகிறார்கள்.
அதற்கு முன்பு மட்டும் இதில் என்ன நடந்தது? இப்போதைக்கு உயர் அதிகாரியிடம் பிரச்சினை போன பின்பு வங்கிக்கணக்கில் சம்பளம் போடுவது, ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளும் முறையை செய்வதாக உறுதியளித்துள்ளார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!' என அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT