Published : 07 Nov 2014 11:54 AM
Last Updated : 07 Nov 2014 11:54 AM

புத்தாக்கத் திட்ட வழிமுறைகள் அறிவிப்பு: புதிய முயற்சிகள், திட்டங்களுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் கொள்கை ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் புதுமை களை புகுத்தி, தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023 என்ற இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புத்தாக்கத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, புத்தாக்கத் திட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் 2015-16ம் நிதியாண்டில் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிதியின் கீழ், புதுமையாக தேர்வாகும் திட்டங்களுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை நிதி செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு புதுமையான தொழில் நுட்பத்தில் திறம்பட விவசாயம் செய்து, மகசூல் பெறுவது குறித்து பல்வேறு வகைகளில் பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் உள்ளாட்சித் துறைகள், மாநிலங்களில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள், தனி சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் உள்ளிட் டவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளுடன் இணைந்து அரசு சாராத தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் புதுமைகளை மேற்கொள்ளலாம். அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 அல்லது மே 15-க்குள் விண்ணப்பங்களை மாநில திட்டக் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.

புத்தாக்கத் திட்டத்தில் தங்களது முயற்சிகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை உரிய அனுமதி பெற்று, அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ல் முதல் கட்டமாகவும், ஏப்ரல் 30-ல் இரண்டாம் கட்டமாகவும் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு ஆண்டில் மட்டும் முதல் ஆண்டாக இருப்பதால், நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம். புத்தாக்க திட்டத்துக்காக தகுதி பெற்ற ஓர் திட்டத்துக்கு அதிகபட்சம், 20 கோடி ரூபாய் வழங்கப்படும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் மட்டும் அனுமதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x