Last Updated : 10 Jan, 2017 09:03 AM

 

Published : 10 Jan 2017 09:03 AM
Last Updated : 10 Jan 2017 09:03 AM

கருகிய பயிர்கள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: வறட்சியின் கோரப் பிடியில் நாகை மாவட்டம்

தோ இன்னும் சில நாட்கள் மட்டுமே. பொங்கல் திருநாள் வந்து விட்டது. ஆனால் அதனைக் கொண்டாட வேண்டிய டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயல்கள் மட்டும் அல்ல; அவர்களின் முகங்களும் எவ்வித உற்சாகமும் இன்றி வறண்டு கிடக்கின்றன. 100 ஆண்டுகளில் பார்த்திராத வறட்சி என்கிறார்கள். கவுரவமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அழிந்து போனதாலும், கடன் நெருக்கடி அதி கரித்த காரணத்தாலும் தற்கொலை சாவுகளும், அதிர்ச்சி மரணங்களும் தினந்தோறும் டெல்டா மாவட்டங்களில் நடக்கின்றன.

நடப்பு சாகுபடி பருவத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் வறட்சியின் கொடூரத்தால் பறிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் மிக தீவிரமான பாதிப்புகளை தலைஞாயிறு, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கீழ்வேளூர் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க முடிகிறது.

முற்றிய நெற்கதிர்கள் தலைசாய்ந்து நிற்க, ஊரெல்லாம் அறுவடைப் பணிகள் நடக்க, தங்கமணிகளைப் போல் மஞ்சள் நிற நெல்மணிகள் குவியல், குவியலாய் குவிக்கப் பட்டிருக்க வேண்டிய நேரமிது. ஆனால் தை மாதம் பிறக்கவுள்ள நேரத்தில், டெல்டா மாவட்ட வயல்களில் எருக்கு பூத்து கிடப்பதும், கருவேல முள் படர்ந்து கிடப்பதும் வறட்சியின் கொடூரத்தைப் படம் பிடித்து காட்டுகின்றன.

தலைஞாயிறு அருகேயுள்ள கிராமம் பிரிஞ்சுமூலை. அங்குள்ள ஏழை விவசாயி வீ.முருகையன் வீட்டுக்கு சென்றபோது, 11 வயது சிறுவன் அரிஹரன், தலையை சுவற்றில் வேக வேகமாக முட்டி அழுது கொண்டிருந்தான். அவனது தாய் ராணி ஓடி வந்து, அவனைப் பிடித்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அவன் உடலில் கீழ் பகுதியில் ஆடை இல்லை. கைகளில் செருப்பை அணிந்திருந்தான். வாயில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.

அவன் மன வளர்ச்சி இல்லாத சிறுவன் என்பது தெரிந்தது. தன்னைச் சுற்றி எவ்வளவு துயரம் நடக்கிறது, தந்தை மரணமடைந்து விட்டார் என்ற உண்மைகள் தெரியாமல் அந்த சிறுவன் ஏதேதோ தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான். தனது கணவரின் மரணத்தை விடவும், தன்னுடைய இந்த மகனையும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளையும் இனி எவ்வாறு காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையில் துடியாய் துடிக்கிறார் ராணி.

முருகையன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில் நீண்ட காலம் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். அந்தப் பண்ணை உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு நிலம் எடுத்து சொந்தமாகவும் சாகுபடி செய்து வந்தார். இந்த ஆண்டு 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்திருந்தார். விதை முளைத்து பயிரும் வளர்ந்தது.

பொய்த்த பருவ மழை

ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் ஆற்றில் நீர்வரவில்லை. அணையில் இருந்து தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரும் முருகையன் வயலை எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆற்று நீர் வயலுக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கை முருகையனுக்கு தொடக்கத்திலேயே இல்லை. எனினும் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்ற அதீத நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் மழை பொய்த்தது. வயலில் இருந்த ஈரம் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து வறண்டு போகவே, முளைத்து வந்த நெற்பயிர் கருகி போய்விட்டது. பயிர் கருகுவதைப் பார்த்த முருகையனின் மனம் பதறியது.

இலுப்பூர் கிராமத்தில் தண்ணீர் இன்றி காய்ந்து வெடித்து கிடக்கும் குளத்தின் தரையில் விரக்தியுடன் அமர்ந்திருக்கும் கிராமவாசி.

கடந்த நவம்பர் 14-ம் தேதி தனது வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி ராணி விவரித்தார். “ஏற்கெனவே ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் கடன்; உடல் நலமும், மன நலமும் குன்றிய மகன்; பள்ளிக்குச் செல்லும் மகள். இந்த சூழலில் சாகுபடியும் அழிந்து போனால் என்ன செய்வேன் என சில நாட்களாகவே தினமும் புலம்பிக் கொண்டிருந்தார். நவம்பர் 14-ம் தேதி காலையில் வயலுக்குப் போய் விட்டு வந்தார். மீண்டும் காலை 10 மணிக்கு வயலுக்குச் சென்றார். மிகவும் சோகமாக இருந்தார். சாப்பிடவும் இல்லை. மதியம் 1 மணிக்கு மீண்டும் ஒருமுறை வயலுக்கு சென்று திரும்பினார். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட பசிக்கவில்லை என்று கூறி சாப்பிட மறுத்து விட்டார்.

மதியம் சுமார் 2 மணி இருக்கும். மகள் பள்ளிக்கூடம் சென்றிருந்தாள். நான் அருகே இருக்கும் கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வீட்டின் நடுவே எனது கணவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல் எனது மகன் அதே இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்த ஆண்டின் வறட்சியால் எனது வயல் மட்டும் போகவில்லை. எனது வாழ்க்கையே போய்விட்டது. இனி என்னால் என்ன செய்ய முடியும்? சுகமில்லாத எனது மகனுக்கு ஒருவேளை பாலும், ரொட்டியும் வாங்கித் தர கூட என் கையில் காசு இல்லை. கூலி வேலைக்கு செல்லும் அளவுக்கு என் உடம்பிலும் தெம்பு இல்லை. அடுத்து என்ன செய்வது என்று எதுவுமே புரியவில்லை.”

சம்பவம் பற்றி விசாரிக்க வருவோரிடம் எல்லாம் ராணி இவ்வாறு புலம்பித் தவிக்கிறார். அவருக்கு ஆறுதல் கூற யாரிடமும் வார்த்தைகள் இல்லை. அரசு தரும் வறட்சி நிவாரணத் தொகை காலத்தில் போய் சேர்ந்தால் அவருக்கு தற்காலிகமாவது ஒரு சிறு ஆறுதல் கிடைக்கும்.

அதிர்ச்சி மரணம்

முருகையன் வீட்டில் இருந்து சில நூறு அடி தொலைவில் உள்ளது பி.சி.வி.பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வீடு. 100 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட பழமையான ஓட்டு வீடு. வீட்டின் கட்டுமானத்தையும், அதன் தோற்றத்தையும் பார்த்தாலே வாழ்வாங்கு வாழ்ந்த வீடு என்பது புரிகிறது. வீட்டின் திண்ணையில் பாலுவின் படத்தில் புதிய மலர் மாலை தொங்குகிறது.

பாலுவின் பண்ணையில் வேலைப்பார்த்த முருகையன், அவரிடம் இருந்துதான் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். முருகையன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியால் பாலு அதிர்ச்சி அடைந்தார். மறுநாள், அதாவது நவ.15-ம் தேதி முருகையனின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை பாலு முன்னின்று கவனித்தார். முருகையனின் மகன் அரிஹரன் மன வளர்ச்சி இல்லாமல் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது அறிந்து சுற்றி இருந்தவர்களிடம் பாலு மிகவும் கவலைப்பட்டிருக்கிறார்.

முருகையனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, கொஞ்ச தூரம் சென்றிருக்கிறது. நெஞ்சு வலியால் இறுதி ஊர்வலப் பாதையிலேயே சரிந்து விழுந்த பாலு, சற்று நேரத்தில் உயிரிழந்தார். மாவட்டம் முழுவதும் நன்கு அறிமுகமான காங்கிரஸ் தலைவரும், ஒன்றுபட்ட திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் இருந்தவருமான பி.சி.வேலாயுதத்தின் மகன்தான் பாலு.

கணவரை இழந்து தவிக்கும் பாலுவின் மனைவி நீலாவதி கூறியதாவது: பெரும் பண்ணையார் என்ற அதிகாரத் தோரணையை அவரிடம் ஒருநாளும் பார்த்ததில்லை. எப்போதும் எளிய மக்களுடன் நெருங்கி பழகுவார். அருகே கொற்கை கிராமத்தில் உள்ள அரசு கால் நடைப் பண்ணைக்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய குடும்பம். ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

தனது பண்ணையில் வேலை செய்த முருகையன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்து சாகுபடி செய்ய சொல்லியிருந்தார். முருகையன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முருகையனின் மன வளர்ச்சி குன்றிய சிறுவன் பற்றி பேசிக் கொண்டிருந்தார். முருகையனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக சென்றவர், வீடு திரும்பாமலேயே சென்று விட்டார்” என்று கண்ணீர் மல்க கூறினார் நீலாவதி.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் இதுபோல ஏராளமானோர் தங்கள் உயிரை விட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் வறட்சியால் உயிரிழக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கீழ்வேளூர் அருகேயுள்ள இலுப்பூர் கிராமத் துக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு மிகப்பெரிய குளத்தைக் காட்டினார் அந்த ஊரைச் சேர்ந்த ஆர்.நடராஜன். குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. வறட்சியால் குளத்தின் தரை வெடித்து கிடக்கிறது.

காய்ந்த குளம் குட்டைகள்

“மேட்டூர் அணையில் திறக்கப்படும் ஆற்று நீர், வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் டெல்டா பகுதி எங்கும் டிசம்பர் மாதத்தில் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியிருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை. பருவமழையும் பொய்த்து விட்டது. இதனால் எங்கள் பகுதியில் குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. குளம், குட்டைகளின் தரைகளே நீரின்றி வெடித்து கிடக்கும்போது, வயல்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை” என்றார் நடராஜன்.

கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த கே.சிவானந்தம் கூறும்போது, “நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்தோம். தண்ணீர் கிடைக்காமல் பயிர் கருகிவிட்டது. வயலை உழுதுவிட்டு, வறட்சியை தாங்கி வளரும் எள், உளுந்து சாகுபடியாவது செய்யலாம் என எண்ணி பலர் எள் அல்லது உளுந்து தெளித்தனர். அதுவும் முளைத்தவுடனேயே கருகிவிட்டது. கையில் இருந்த பணத்தையும், கடனுக்கு வாங்கியும் நிலத்தில் போட்டுவிட்டு, எல்லாம் அழிந்து போக, அடுத்து என்ன செய்வது என எதுவும் தெரியாமல் உட்கார்ந்திருக்கிறோம்” என்றார்.

வறட்சியின் தீவிரத்தை அரசு உடனடியாக உணர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அரசு இயந்திரம் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

விவசாயி ஏ.ராஜேந்திரன் வெளிப்படுத்திய மற்றொரு பிரச்சினை மிகவும் கவலை கொள்வதாக உள்ளது. “எல்லோரது கவனமும், கருகிப்போன பயிர்களில் மட்டுமே உள்ளது. ஆனால் இதையும் தாண்டி பேராபத்துகளை வரும் மாதங்களில் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே நாகை மாவட்டத்தின் பெரும்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விட்டது. சாகுபடி காலங்களில் வயல்களில் பாயும் ஆற்று நீரும், நவம்பர், டிசம்பரில் பெய்யும் பருவமழை தண்ணீரும்தான் நிலத்துக்குள் இறங்கி, உப்பின் அளவை குறைக்கும்.

இதன்மூலம் அடுத்த பருவமழை காலம் வரை நிலத்தடி நீர் மூலம் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டு ஆற்று நீரும், மழை நீரும் கிடைக்காததால் இப்போதே நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து விட்டது. அடுத்த சில மாதங்களில் உப்பின் தன்மை மேலும் அதிகரித்து, இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட போகிறோம். கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்று கேரளாவுக்கு அனுப்பும் நிலை உண்டாகும். இந்த பேராபத்தை இப்போதே உணர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ராஜேந்திரன்.

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கூறியதாவது: 1876-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் மிகவும் குறைவான மழை பெய்த ஆண்டு இதுதான் என வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் இருந்தே வறட்சியின் தாக்கம் தமிழகம் முழுவதும் எவ்வாறு இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பொருத்தமட்டில், மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பயிர்கள் கருகி, சாகுபடி 100 சதவீதம் அழிந்து விட்டது. வடக்குப் பகுதிகளில் பயிர்கள் உள்ளன. ஆனால் போதிய தண்ணீர் கிடைக்காததால் மகசூல் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண புதிய விதிகளின்படி 33 சதவீத அளவுக்கு மகசூல் பாதிப்பு ஏற்பட்டால் கூட முழுமையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் தற்போதைய நிலைமையை சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணத் தொகை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் தமது சொந்த நிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கிட வேண்டும். விவசாயிகளின் தற்கொலை மரணங்களும், அதிர்ச்சி மரணங்களும் சில அமைச்சர்களால் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் இத்தகைய மரணங்களை மூடி மறைக்காமல், மாநில அரசு முறைப்படி பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பாதுகாக்க போதிய கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x