Last Updated : 02 Aug, 2016 07:38 AM

 

Published : 02 Aug 2016 07:38 AM
Last Updated : 02 Aug 2016 07:38 AM

அதிமுகவில் அசுர வளர்ச்சி அடைந்தாலும் தொடர் சர்ச்சைகளால் சசிகலா புஷ்பா வீழ்ச்சி

புதுடெல்லி விமான நிலையத் தில் கடந்த 30-ம் தேதி திமுக மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கினார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா(40).

இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை, கட்சியின் பொதுச்செ யலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் நேரில் கண்டித்துள்ளார். நேற்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்லி கட்சித் தலைவர் நிர்ப்பந்தம் செய்ததாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறிய சசிகலா புஷ்பா, தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதில் லை எனவும் அறிவித்தார். மாநிலங்களவையில் கட்சி தலைமை மீது பகிரங்கமாக புகார் கூறிய அடுத்த நொடியே, சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

சசிகலா புஷ்பா அதிமுகவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தவர். தூத்துக் குடி மாவட்டம் முதலூர் அரு கேயுள்ள அடையல் என்ற சிறிய கிராமம்தான் சசிகலா புஷ்பாவின் சொந்த ஊர்.

அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன். இந்த தம்பதிக்கு பிரதீப் ராஜா(17) என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். ஆரம்பத்தில் சென்னை யில் தனியார் பள்ளியில் ஆசிரி யையாக பணியாற்றிய சசிகலா புஷ்பா, பின்னர் `டீம் ஐஏஎஸ் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தினார்.

சிறுவயது முதலே அதிமுகவில் தீவிர தொண்டராக இருந்த சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மாவட்ட அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகமானார். அன்றுமுதல் ஜெயலலிதாவின் நன் மதிப்பை பெற்றவராக மாறினார் சசிகலா புஷ்பா. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திரு நெல்வேலி மாவட் டம், ராதாபுரம் தொகுதி அதிமுக வேட் பாளராக சசிகலா புஷ்பா அறிவிக்கப் பட்டார். ஆனால், பின்னர் தேமுதிகவுடன் கூட்டணி ஏற்பட்டு, அந்த கட்சிக்கு ராதாபுரம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 2011 அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தூத்துக் குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று தூத் துக்குடி மாநகராட்சியின் 2-வது மேயரானார்.

கட்சியில் இளைஞர், இளம் பெண் கள் பாசறையின் மாநில துணைச் செய லாளரானார். 2013-ல் அதிமுக மகளிரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் நம் பிக்கைக்கு உரியவராக மாறிய சசிகலா புஷ்பா 2014-ல், மேயர் பதவியை ராஜினாமா செய் துவிட்டு, மாநிலங்களவை உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அதிமுக மாநிலங்க ளவை கொறடா உள்ளிட்ட பல பதவிகள், பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

கட்சியினர் புகார்

சசிகலா புஷ்பா எந்த அளவுக்கு கட்சியில் வேகமாக வளர்ந்தோரோ, அதே அளவுக்கு தொடக்கம் முதல் சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். மேயராக இருந்தபோது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களை அவர் மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் தது. மாமன்ற உறுப்பினர்கள்கூட முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்கினால் தான் மேயரை பார்க்க முடியும் என்ற அவரது உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன், சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப் படங் கள் வாட்ஸ்அப் மூலம் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனால், இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப் பட்டவை என அவரது கணவர் பின்னர் விளக் கம் அளித்தார்.

சசிகலா புஷ்பாவின் நடவடிக் கைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவர் மீதான நம்பிக்கையை இழந்த முதல்வர் ஜெயலலிதா, அவரை மாநில மக ளிரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து கடந்த ஜனவரி மாதம் அதிர டியாக நீக்கினார். அதில் இருந்தே சசிகலா புஷ் பாவுக்கு இறங்கு முகம்தான். கட்சியின் நிகழ்ச்சிகளில் கடந்த சில மாதங்களாகவே அவர் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வந்தார்.

ஆடியோவால் பரபரப்பு

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வாட்ஸ் அப் மூலம் மேலும் ஒரு சர்ச்சை யில் சிக்கி னார். தூத்துக்குடியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன், சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ, `வாட்ஸ் அப்’ மூலம் பரவி பெரும் பரப ரப்பை ஏற் படுத்தியது. அந்த ஆடியோவில், தூத் துக்குடி தொகுதியில் அதிமுக தோற்கும் என்றும், வெள்ள நிவாரணப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி நிர்வாகம் சரியாக செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ சர்ச்சை அடங் கிய நிலையில், டெல்லி விமான நிலை யத்தில், திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த சர்ச்சை 2 நாட்களுக்கு முன் பூதாகரமாக வெடித்தது. இந்த சர்ச்சை யால் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட் டுள்ளார் சசிகலா புஷ்பா. இவர், அதிமுகவில் எப்படி குறுகிய காலத்தில் முதல்வரின் நன்மதிப்பை பெற்று வேகமாக வளர்ச்சி அடைந்தாரோ, அதுபோ லவே குறுகிய காலத்தில் கெட்டப் பெயரை சம்பாதித்து வீழ்ச்சியும் அடைந்துள்ளார் என்கின்றனர் தூத் துக்குடி மாவட்ட அதிமுகவினர்.

முனைவர் பட்டம் பெற்றதிலும் சர்ச்சை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது பெரும் சர்ச்சை எழுந்தது.

பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் முழுநேர முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களுக்குதான் முனைவர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

சசிகலா புஷ்பா 2012 அக்டோபர் 8-ம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத் துறையில் 3 ஆண்டுகள் முழுநேர முனைவர் பட்டப் படிப்புக்கு சேர்ந்தார். இப்படிப்பை முடித்து பட்டம் பெற குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகிவிடும். ஆனால் சசிகலா புஷ்பா 3 ஆண்டுகள், 11 நாட்களில் (2015 அக்டோபர் 19-ம் தேதி) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக பல்கலைக்கழகத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதியே அவரிடம் வாய்மொழித் தேர்வும் நடத்திவிட்டனர்.

முதுகலை படிப்பின்போது 53 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்த அவர், முனைவர் பட்டப்படிப்பில் 200-க்கு 193 மதிப்பெண்கள் பெற்றதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. தூத்துக்குடி மேயராக வும், அதிமுக மகளிரணி மாநிலச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பி னராகவும் இருந்துகொண்டு, எப்படி ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக சசிகலா புஷ்பா பயின்றிருக்க முடியும். அதுவும் 3 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, முனைவர் பட்டம் பெற்றது சர்ச்சைகளை உருவாக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x