Published : 16 Jan 2017 10:04 AM
Last Updated : 16 Jan 2017 10:04 AM
தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த ஆண்டில் பணி ஓய்வு பெறுகின்றனர். புதிய டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) அதிகாரிகளின் எண்ணிக்கை 263. ஆகும். கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 223 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுவது வழக்கம். அதன்படி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், இந்த ஆண்டு ஜூனிலும், உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் ஜூலையிலும், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் செப்டம்பரிலும் ஓய்வு பெற உள்ளனர்.
தமிழக காவல்துறை (டிபிஎஸ்) அதிகாரியாக இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற ராமசுப்ரமணி, மே மாதத்திலும் திருஞானம் மார்ச் மாதமும் ஓய்வு பெறுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர்களுக்கு மாநில அரசு நினைத்தால் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கலாம். ஏற்கெனவே டிஜிபிக்களாக இருந்த ராமானுஜம், அசோக்குமாருக்கு இதுபோல பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது டி.கே. ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ளார். எனவே, ஓய்வு பெறுவதற்குள் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வாக டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், போலீஸ் பயிற்சி டிஜிபி கே.பி.மகேந்திரன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.
அதேபோல சென்னை காவல் ஆணையர் பதவியைப் பிடிக்க கூடுதல் டிஜிபிக்கள் சங்காராம் ஜாங்கிட், ஜே.கே திரிபாதி, சி.கே. காந்திராஜன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், தற்போது மத்திய அரசு பணியில் உள்ளார். அவரும் இந்த ஆண்டு அக்டோபரில் பணி ஓய்வு பெறுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT