Published : 12 Apr 2017 11:03 AM
Last Updated : 12 Apr 2017 11:03 AM

டாஸ்மாக் கடை எதிர்ப்பு எதிரொலி: சாமளாபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த 27 பேர் கைது; முழு கடையடைப்பு

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த 27 பேர் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து சாமளாபுரம் மக்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாமளாபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 மதுக்கடைகள், சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையறிந்த பொதுமக்கள் சோமனூர் - காரணம்பேட்டை சாலையில் சாமளாபுரம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

புதிய மதுக்கடையை திறக்கக்கூடாது, குடியிருப்புகளுக்கு நடுவே மதுக்கடை அமைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அவர்கள் வலியுறுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்து சாலைமறியலில் பங்கேற்றதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகளுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். திருப்பூர் மாவட்ட போலீஸாரும், அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சுமார் 7 மணி நேரமாக போராட்டம் நடைபெற்றும், எந்தவொரு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வராததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். பேச்சுவார்த்தையை புறக்கணித்து, உறுதியான உத்தரவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் அங்குள்ள கடைகளையும் அடைக்கவும், அனைவரும் கலைந்து செல்லவும் போலீஸார் திடீரென உத்தரவிட்டனர். ஆனால் அதை மக்கள் பொருட்படுத்தவில்லை.

தடியடி தாக்குதல்

நேற்று மாலை 5 மணியளவில் போலீஸாரும், அதிரடிப்படையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்தபடியே திடீரென தடியடி நடத்தினர். இதை எதிர்பார்க்காத பெண்களும், குழந்தைகளும் சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதனால் போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் 3 பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போலீஸாரின் தடியடியைக் கண்டித்து பொதுமக்களும் கற்களை வீசி எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் தடியடி தாக்குதலுக்கு எம்எல்ஏவும், போலீஸாருமே காரணம் என குற்றம் சாட்டிய மக்கள், தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். இந்த தடியடி சம்பவத்தின் போது, அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரை திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்கியதாகவும், சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவருக்கு மண்டை உடைந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பெண்கள் மீது ஏடிஎஸ்பி நடத்திய தாக்குதலை கண்டித்து, காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், சாமாளபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், போலீஸார் தடியடி நடத்தியதில் சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ் என்பவரும், பலத்த காயம் அடைந்தார். அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸார் தடியடியில் படுகாயம் அடைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை ஓங்கி அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்யவேண்டும். காயம்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தெ.பிரபாகரன் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியடைந்தத்து. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். இதில் 20 பேர் மீது 8 பிரிவுகளிலும், 7 பேர் மீது 15 பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து சாமளாபுரம் மக்கள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்த 27 பேரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x