Published : 05 Mar 2017 11:12 AM
Last Updated : 05 Mar 2017 11:12 AM

தென்னிந்தியாவில் முதல்முறையாக ரப்பர் தடுப்பணை உதகையில் அறிமுகம்: உயரத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்

கான்கிரீட் தடுப்பணைக்கு மாற்றாக ரப்பர் தடுப்பணை உதகையில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயி களின் வசதிக்கு ஏற்ப இதன் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வெள்ளம், புயல், வறட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். மண் மற்றும் நீர்வள பாதுகாப்புக்கு, நீர் பிரி முகடுப் பகுதிகளில் வழிந்தோடும் உபரி நீரை சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமிக்கப்படும் நீர், விவசாய நிலங்களின் பாசனத்துக்கு பயன் அளிக்கும் என்று மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக மண் மற்றும் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் படிமட்ட முறையில் விவசாயம் செய்வது, சாய்தள நிலங்களில் சணல் வலை தொழில்நுட்பம், தாவர வளர்ப்பு மூலமாக மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை, ஆராய்ச்சிகள் மூலமாக விஞ்ஞானிகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்திய அளவில் முதன்முறையாக உதகையில் ரப்பர் தடுப்பணை தொழில்நுட்பத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்திய நீர் மேலாண்மை நிறுவனமும், இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலகொலா சில்லஹல்லா நீர் பிரி முகடுப் பகுதியில், ரூ.8 லட்சம் செலவில் ரப்பர் தடுப்பணையை அமைத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் ஓ.பி.எஸ்.கோலா கூறும்போது, “ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள இந்திய நீர் மேலாண்மை நிறுவன விஞ்ஞானிகளால் ரப்பர் தடுப்பணை தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டது. ஆறு, ஓடை, கால்வாய்களின் இடையே அமைக்கப்படும் ரப்பர் தடுப்பணை யில் நீர் நிரப்புவதன் மூலமாக அதன் உயரம், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகிறது.

இத்தடுப்பணையின் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்பதால், வெள்ள நீரை வடிகட்டவும், வண்டல் மண் படிவங்களை வெளியேற்றவும் முடியும். இது, கான்கிரீட் தடுப்பணைகளில் சாத்தியமல்ல. இதன்மூலமாக விவசாய நிலங்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைக்கும்.

இத்தொழில்நுட்பத்தை விவ சாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் உள்ள ஓடை, கால்வாய்களில் அமைக்கலாம். தேவையான ஆலோசனைகளை, மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வழங்குவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x