Published : 05 Nov 2013 10:50 AM Last Updated : 05 Nov 2013 10:50 AM
பட்டாசு ஒலி, காற்று மாசு: சென்னையில் திருவல்லிக்கேணி முதலிடம்
தீபாவளி பண்டிகையின்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளால் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்துவதில் தொடர்ந்து இந்த ஆண்டும் திருவல்லிக்கேணி பகுதி முதலிடம் வகிக்கிறது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வக துணை இயக்குநர் வீ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது: சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு அளவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்தது. திருவல்லிகேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை, தியாகராயநகர் ஆகிய ஐந்து இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுவாசிக்கும்போது உட்செல்லக் கூடிய மிதக்கும் நுண்துகள்களை கண்டறியும் கருவியை (respirable suspended particulate matter) கொண்டு அக்டோபர் 29 முதல் தீபாவளி நாளான நவம்பர் 2-ம் தேதி வரையிலான ஐந்து நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் காற்று, ஒலி மாசு திருவல்லிக்கேணி பகுதியில்தான் அதிகம். அங்கு இந்த ஆண்டு ஏற்பட்ட காற்று மாசு அளவு 537 நுண்துகள்களாக இருந்தது. ஒலி மாசு 121 டெசிபல் ஆக இருந்தது. தீபாவளியின்போது திருவல்லிக்கேணி பகுதியில் மழை பெய்ததால் மாசு அடைந்த காற்று வெளியேற முடியாமல் அடைபட்டு கொண்டது. இதனால்தான் இந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது.
வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் சௌகார்பேட்டையில் காற்று மாசு அளவு கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. பெசன்ட் நகர் பகுதியிலும் காற்று மாசின் அளவு இந்த ஆண்டு வெகுவாக குறைந்திருந்தது. இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.
WRITE A COMMENT