Published : 27 Sep 2013 12:48 PM
Last Updated : 27 Sep 2013 12:48 PM
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுதலைக்காக பிரதமருக்கு தொடர்ச்சியாய் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். இலங்கை அரசால் தண்டிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேர் திருச்சி சிறையில் வாடுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?
போதைப் பொருள் கடத்தலுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை நிச்சயம். இதனால், தமிழக மீனவர் கள் மீது போதை வழக்கு போடுவது இலங்கை கடற்படைக்கு கைவந்த கலை. அப்படி சிக்கவைக்கப்பட்ட ஐந்து மீனவர்கள்தான் இப்போது திருச்சி சிறையில்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மாரி வேல், முருகவேல், கண்ணன், ராஜேந்திரன் ஆகியோர் 2005-ம் ஆண்டு மே 30-ம் தேதி கடலுக்குக் கிளம்பினார்கள். மறுநாள் திரும்ப வேண்டிய அவர்கள், இரண்டு நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. ’நான்கு பேரும் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்ற செய்தி வந்தது.
உறவினர்கள் அலறியடித்துச் சென்று மீன்வளத் துறையில் முறையிட்டார்கள். நடவடிக்கை இல்லை என்றதும், நிதி திரட்டி, வவுனியா நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினார்கள். விசாரணை ஐந்து வருடங்களாக நடந்தது. கடைசியில் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதியானது.
கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை யின் மூலம், நான்கு பேரும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இவர்களோடு சேர்த்து அபுபக்கர் என்பவரும் திருச்சிக்கு மாற்றப்பட் டார். இவரும் ராமேஸ்வரம் மீனவர். 2004-ல் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
ஐந்து பேரும் சிறைக்குள் தவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் கம்பிக்கு வெளியே கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
“எங்க வீடுகள பார்த்தா போதைப்பொருள் கடத்துறவன் வீடு மாதிரியா இருக்கு சார். செவனேன்னு மீன்பிடிக்கப் போன புள்ளைங்களப் புடிச்சு பொய் கேஸ் போட்டு குடும்பத்தையே அந்தல சிந்தல ஆக்கிட்டாங்க. என் தம்பி உள்ள போன கொஞ்ச நாள்ல எங்க அக்கா செத்துப் போயிருச்சு. வாங்கின கடனுக்கு வட்டி கட்டக் கூட வழியில்லாம தவிக்கிறோம். நானும் அம்மாவும் சங்குக் கம்பெனிக்கு வேலைக்கு போயி வயித்தைக் கழுவுறோம்" என்கிறார் மீனவர் முருகவேலின் அக்கா உமேஸ்வரி.
மாரிவேல் மனைவி மாரி, கண்ணன் மனைவி லட்சுமி, சுப்பிரமணியன் மனைவி மங்கையர்க்கரசி இவர்களும் இப்போது அன்றாட சாப்பாட்டுக்கே தத்தளிப்பில் இருக்கிறார்கள். "எத்தனை நாளைக்குத்தான் வாப்பா வெளிநாட்டுல இருக்காருன்னு பெத்த புள்ளைங்ககிட்ட பொய் சொல்றது. அதுக மதி வந்து கேக்குறப்ப கஷ்டமா இருக்கு" என்கிறார் அபுபக்கர் மனைவி சுபைதாகனி.
"தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தின்படி இவர்களை தாராளமாய் விடுதலை செய்ய முடியும்" என்கிறார் இவர்களது வழக்கறிஞர் ராஜேந்திரன். தேசிய கடலோர பெண்கள் இயக்கத்தின் மாநில தலைவி புனிதா, “கேரளாவைச் சேர்ந்த 3 மீனவர்களும் இவர்களோடு இலங்கை சிறையில் இருந்துருக்காங்க. அவங்களுக்கு கேரள அரசு நிறைய உதவி செஞ்சிருக்கு. வக்கீல் வைச்சு கேஸ் நடத்திருக்காங்க. தொகுதி எம்.எல்.ஏ. நேரில் போய் மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி உதவிருக்காரு. நம்ம ஸ்டேட்டுல எதுவுமே இல்லை" என்று ஆதங்கப்பட்டார்.
ஐந்து பேரையும் விடுதலை செய்யக்கோரி, போராட்டங்கள் நடத்தி வரும் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், “இதேபோல, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை போதை கடத்தல் வழக்கில் இலங்கை கடற்படை கடந்த நவம்பரில் கைது செய்தது. அப்போது தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இன்றளவும் அந்தக் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குது. ஆனா, இந்தக் குடும்பங்களை கண்டுக்கவே இல்லை. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல்வர், திருச்சி சிறையில் இருக்கும் மீனவர்களை விடுதலை செய்ய தயங்குவது ஏன்? இதை நாடாளுமன்றம் வரை கொண்டு போவோம்" என்றார்.
ராமேஸ்வரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் திலோமி தியாகராஜன், "அந்த ஐந்து பேர் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த மனுவும் வரவில்லையே" என்கிறார்.
தமிழக சிறையிலேயே தமிழக மீனவர்கள் வாடும் கொடுமைக்கு முடிவுகட்ட முதல்வர் மனம் வைப்பாரா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT