Published : 11 Sep 2016 01:53 PM
Last Updated : 11 Sep 2016 01:53 PM
திருச்சி மாவட்டம் சிறுபத்தூர் கிராமத்தில் உள்ள உப்பாறு அணையில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.48.65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுபத்தூர் கிராமம் உப்பாற்றில், 1986-ல் அணை கட்டப்பட்டது. பெரமங்கலம் ஏரி மற்றும் ஓமாந்தூர் ஏரி ஆகியவற்றிலிருந்து வரும் உபரி நீர் வாய்க்கால்கள் மூலம் இந்த ஏரியை வந்தடைகிறது. இதன் நீர்பிடிப்புப் பகுதி 92 சதுர கிலோமீட்டர். அணையின் முழு நீர்மட்டம் 10.83 அடி. முழு கொள்ளளவு 80 மில்லியன் கன அடி.
உப்பாறு அணையின் மூலம் திருச்சி மாவட்டத்தில் சிறுபத்தூர், தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, ஆய்குடி, சமயபுரம் மற்றும் வலையூர் கிராமங்களில் உள்ள 1,785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் உப்பாற்றில் கலந்து இறுதியில் நத்தமாங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
இந்த அணை கட்டப்பட்டது முதல், ஏறத்தாழ 30 ஆண்டுகளில் பெரிய அளவிலான பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அணையை முறையாக பராமரிப்பு செய்து, மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) அரியாறு கோட்டம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து உப்பாறு அணையை புனரமைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்ட உலக வங்கி நிதியுதவி மூலம் ரூ.48.65 லட்சத்துக்கு தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தற்போது அணையின் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. அணையின் கரையின் பின்புற சாய்வக வழிந்தோடி (Chute) கட்டுமானப் பணிகளும், அணையின் கரையின் பின்புற வழிந்தோடி வாய்க்கால் (Toe Drain) கட்டுமானப் பணிகளும், அணையின் நீர்தேக்கத்தின் நீர் வழிந்தோடியின் முன்புறம் பழுதுபார்த்தல், அணையின் குழுமிகளின் அடைப்பான் ரப்பர் சீல்களை மாற்றுதல், அணையின் படிக்கட்டுகளில் இரும்பு கைப்பிடிகள் அமைத்தல், அணையின் நீர்தேக்கத்தின் மேல் பாதையின் இருபுறங்களும் சிமென்ட் கல் பதிக்கும் பணி மேற்கொள்ளுதல், அணையின் காவலர் அறை கட்டுமானப் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அரியாறு கோட்ட செயற் பொறியாளர் வி.செல்வராஜ், ‘தி இந்து’விடம் கூறியபோது, “இந்த அணையில் சிறு, சிறு அளவில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போதுதான் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் முழு அளவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். இதன் பணிகள் மூலம் அணையின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT